பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஐந

ஐந்தாந்திருவாய்மொழி - ‘அந்தாமத்தன்பு’

முன்னுரை

    1‘கேஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’ 2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்; 3அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில்  முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’

_____________________________________________________________

1. விஷ்ணு தர்மம், 68.

2. ‘என்றதனைப் போன்றதொன்றாம்’ என்றது, பிரிவால் உண்டாகிய துன்பம் முடிக்கத் தேட,
  நசையானது முடிக்க ஒட்டாமல் ஜீவிப்பிக்க, இப்படியே, மேல் ‘ஆடிஆடி’ என்ற
  திருவாய்மொழியில் ஆழ்வாருடைய நிலை சென்றது என்றபடி.

3. ‘அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக’ என்றதனை ‘அனுபவித்து அவ்வனுபவத்தால்
  உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்’
  என்றதனோடு கூட்டி முடிக்க.

4. ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத். 59.

5. ‘இரண்டுக்கும் நலிவு வாராமல்’ என்றதனை ‘முதலைக்கே நலிவு வரும்படி’ என்பதனைக்
  கொணர்ந்து அதனோடு முடிக்க. திருப்பரியட்டம் - வஸ்திரம்.

6. திருவாய். 2. : 4. 4