பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஆறாந்திருவாய்மொழி - பா. 1

145

    பொ-ரை : பரம்பதத்தில் இருப்பவனே! நீலமணி போன்ற நிறத்தை உடையவனே! என்னுடைய அழகிய வாமனனே! என் மனத்தில் வீற்றிருந்து, கழிகின்ற நாள்தோறும் அமிர்தின் மயமாய் இருக்கின்ற வான் ஏறே! செய்யப்பட்டுத் தப்ப அரிதாய் வருகின்ற தீமைகளை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்களுக்குத் துன்பத்தைச் செய்கின்ற குந்தனே! நான் உன்னை நன்றாகப் பிடித்தேன்; இனி நழுவமாட்டேன்; இதனை நீ திருவுள்ளம் பற்று.

    வி-கு : ‘பொல்லா’ என்பது குறிப்பு மொழி; ‘அழகிய’ என்பது பொருள். ‘மன்னி அமுதாய வான் ஏறே’ எனக் கூட்டுக. வான் -இடவாகு பெயர். ‘செய் குந்தா வரும் தீமை’ எனப் பிரிக்க. அனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்தலுமாம். ‘தீர்த்துச் செய் குந்தா’ எனக் கூட்டுக. ‘குந்தன்’ என்பது, இறைவனது திருப்பெயர். அது விளி ஏற்றலின் ‘குந்தா’ என ஈறு கெட்டு அயல் நீண்டது.

    இத்திருவாய்மொழியில் 1ஒவ்வொரு பாசுரமும் இரண்டு அடிகள் சில சீர் குறைந்து வருதலின், ஆசிரியத்துறை எனப்பெறும்.

    ஈடு : ‘அம் தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் இறைவன் அழ்வாருடனே வந்து கலந்து தான் பெறாப்பேறு பெற்றானாய் இருந்தான்; இவர், ‘அல்ஆவி உள் கலந்த’ என்றும், ‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தான்’ என்றும் தம்முடைய தாழ்மையினைச் சொன்னவாறே, ‘வளவேழ் உலகு தலை எடுத்து, இன்னம் இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று எம்பெருமானுக்குப் பிறந்த 2ஐயத்தை நீக்குகிறார் இப்பாசுரத்தில்.

    வைகுந்தா - ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்யபுத்ர’ என்னு மாறுபோன்றும், திருவாய்ப்பாடியில் பெண்கள் ‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும், ‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச்

_____________________________________________________________

1. ‘கடையதன் அயலடி கடைதபு நடையவும்
  நடுஅடி மடக்காய் நான்கடி யாகி
  இடையிடை குறைநவும் அகவல் துறையே.’

(யா. கலம். 76)

  என்பது இலக்கணம்.

2. ‘வளவேழுலகு தலையெடுத்து’ என்றது, அத்திருவாய்மொழியில் உண்டாய தன்மை
  உண்டாகி என்றபடி.

3. ‘ஐயத்தை நீக்குகிறார்’ என்றது, ‘பிடித்தேன் கொள் சிக்கெனவே’ என்ற பகுதியைத்
  திருவுள்ளம் பற்றி. ஆழ்வார் இங்ஙனம் அருளிச்செய்கின்ற அதனால் இறைவனுக்கு ஐயம்
  உண்டாயினமை பொருளாற்றலாற்போதரும்.