பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1சம

ஏழாந்திருவாய்மொழி - முன்னுரை

173

1சம்பந்தமுடையார் அளவும் பெருகினபடியைக் கண்டு, ‘இது இறைவன் என்பக்கல் செய்த பக்ஷபாத மிகுதி அன்றோ?’ என்று இனியராய், தம்மை அங்கீகரிக்கைக்கு ஈடான குணங்கள் செயல்கள் முதலியவற்றை அநுசந்தித்து, அவற்றிற்கு வாசகமான பன்னிரண்டு திருப்பெயர்களாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்.

    ‘சர்வேஸ்வரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரிப்பான் என்?’ எனின், சர்வேஸ்வரன் ஒருவனை அங்கீகரித்தால், அது பின்னை அவன் அளவிலே நில்லாதே அன்றோ? 2‘இருடிகள் குடியிருப்பை அழித்தான்; மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீஜடாயு மஹாராஜரை நலிந்தான். இவை எல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; இவன் ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவதுகாண்’ என்று இருந்தோம்; அது அந்நாளில் பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்க வேண்டுமோ? வேண்டுவன செய்யப் பாரும்; நீர் இறாய்தது

_____________________________________________________________

1. ‘சம்பந்தமுடையார் அளவும்’ என்றது, ‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும்’ என்ற
  பாசுரப்பகுதியை நோக்கி, பகவானுடைய விஷயீகாரம் சம்பந்தி சம்பந்திகள் அளவும்
  செல்லும் என்கைக்கு நான்கு உதாரணம் காட்டுகிறார், ‘இருடிகள் குடியிருப்பை’ என்றது
  முதல் ‘நீ அவனுக்கு நல்லையாகில் அவன் முன்னாகப் போ என்று அருளிச்செய்தான்’
  என்றது முடிய.

2. ஸ்ரீராமா. யுத். 114 : 101. இச்சுலோகத்தின் பொருளோடு,

  ‘கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்
  உள்வழி உடையை; இல்வழி இலையே;
  போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
  மாற்றே மாற்றல் இலையே; நினக்கு
  மாற்றோ ரும்இலர் கேளிரும் இலர்எனும்
  வேற்றுமை இன்று;அது போற்றுநர்ப் பெறினே.’

  என்னும் பரிபாடற்பகுதியும், ‘என்றது, உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும்
  உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான் அவை உளவல்ல என்றவாறாம்’ என்ற
  அதன் உரையும் ஒப்பு நோக்கத் தகும்.

(பரிபா. 4)

  ‘அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கித்
  தன்னதோ ளிணையை நோக்கி, ‘வீடணா! தக்க தன்றால்;
  என்னதோ இறந்து ளார்மேல் வயிர்த்தல்?நீ இவனுக்கு ஈண்டு
  சொன்னதோர் விதியி னாலே கடன்செயத் துணிதி’ என்றான்.’ 

  என்றார் கம்பநாடரும்.