பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஏழாந்திருவாய்மொழி - பா. 13

205

    முதற்பாட்டில், தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போன்று இறைவனுடைய அங்கீகாரத்திற்கு ஆளானார்கள் என்றார்; இரண்டாம் பாட்டில், இதற்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும், அந்நாராயண மந்திரத்தின் பொருள் இன்ன தென்றும் அருளிச்செய்தார்; மூன்றாம் பாட்டில், இப்படி அங்கீகரிப்பதற்குரிய காரணத்தைச் சொன்னார்; நான்காம் பாட்டில், எல்லாக் காலங்களிலும் தன்னையே அனுபவிக்கும்படி செய்தான் என்றார்; ஐந்தாம் பாட்டில், இப்படித் தம்மை அனுபவித்ததனாலே அவன் வடிவில் புகரைச் சொன்னார்; ஆறாம் பாட்டில், ‘இப்படி என்னை அடிமை கொண்டதற்கு அடி நிர்ஹேதுகமான திருவருள்,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘தன்னையே எல்லாக் காலமும் அனுபவிக்கும்படியான மனத்தினைத் தந்தான்’ என்றார்; எட்டாம் பாட்டில்; தந்த அளவு அன்றியே தீ மனத்தினையும் போக்கினான்,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘தன்னுடைய நற்குணங்களையே நான் அனுபவிக்கும்படி என் மனத்திலே புகுந்தான்,’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘அனுபவத்திற்கு விரோதியாய் இருந்த இந்திரியங்களையும் தன் வழியாக்கிக் கொண்டான்’ என்றார்; பதினோராம் பாட்டில், ‘இவ்விதமான இறைவன் என்னை அல்லது அறியான் ஆனான்,’ என்றார்; பன்னிரண்டாம் பாட்டில், ‘என்னைப்போலே காண்பார்க்குக் காணலாவதொழியத் தன் முயற்சியால் அறியப்போகாது’ என்றார்; முடிவில், பலம் சொல்லி முடித்தார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        கேசவனால் என்தமர்கள் கீழ்மேல் எழுபிறப்பும்
        தேசடைந்தார் என்று சிறந்துரைத்த - வீசுபுகழ்
        மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல் லாம்உய்கைக்கு
        ஆறென்று நெஞ்சே! அணை.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.