பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஒன

ஒன்பதாம் திருவாய்மொழி

‘எம் மா வீடு’

முன்னுரை

    ஈடு : மேல் திருவாழியிலே, ‘நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்’ என்று இவர்தாமும் அருளிச்செய்து, 1சர்வேஸ்வரனும் இவர்க்கும் இவர் உறவினர்கட்கும் 2பரமபதம் கொடுப்பானாகப்பாரிக்க, அதனைக் கண்டு, ‘தேவரீர் எனக்குப் பரமபதம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப் பார்ப்பது; அதாவது, ‘உமக்காக மோக்ஷம் கொடுக்கிறோம் கொள்ளும்’ என்று எனக்காகத் தருகை அன்றி, ‘நமக்காகக் கொள்ளும்’ என்று தேவரீருக்கே ஆகும்படியாகத் தரவேண்டும்,’ என்று 3தாம் நினைத்திருந்தபடியை அவன் திருமுன்னர்ப் பிரார்த்திக்கிறார். ‘ஆயின், இதனை இத்தனை நாள் அறுதியிடாது ஒழிவான் என்?’ என்னில், அவன் மேலும் மேலும் குணங்களை நுகர்விக்கையாலே அதற்குக் காலம் போந்தது இத்தனை அல்லது, இதனை அறுதியிடுவதற்குக் காலம் பெற்றிலர். ‘ஆயின், 4இப்பொழுதும் குணானுபவமே அன்றோ பண்ணுகிறது?’ என்னில், ஆம், அப்படியே; இறைவன் தம் பக்கல் மேலும் மேலும் செய்கிற விருப்பத்தைக் கண்டு, ‘இவனுக்கு இந்தக் காதற்பெருக்கு முடியத் தொடர்ந்து செல்லுவது ஒன்றாய் இருந்தது; நாம் இவனை மீட்டாகிலும்

_____________________________________________________________

1. மேலே ’அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகெலோ!’ என்று இவர் தாமும்
  விரும்பி, மேல் திருவாய்மொழியிலே ‘நலமந்த மில்ல தோர் நாடு புகுவீர்’ என்று
  பிறர்க்கும் உபதேசிக்கையாலே, இவர்க்கு மோக்ஷத்தில் விருப்பம் இருந்தது என்று
  பார்த்துச் ‘சர்வேஸ்வரனும் இவர்க்கும் இவர் உறவினர்கட்கும் பரமபதம் கொடுப்பானாகப்
  பாரிக்க’ என்று வேண்டுவன சிலவற்றைக் கூட்டிப் பொருள் முடிவு காண்க.

2. ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்று இவர் மறுப்பதனாலே இறைவன் இவருக்குப்
  பரமபதம் கொடுப்பானாகப் பாரித்தமை பொருள் ஆற்றலாற்போதருதலின் ‘பரமபதம்
  கொடுப்பானாகப் பாரிக்க’ என்கிறார்.

3. ‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்ற இடத்தில் கூறியதைத் திருவுள்ளம் பற்றித் ’தாம்
  நினைத்திருந்த படியை’ என்கிறார். ‘அவன் திருமுன்னர்ப் பிரார்த்திக்கிறார்’ என்றது,
  ‘அம்மா! அடியேன் வேண்டுவது இஃதே’ என்றதனை நோக்கி.

4. ‘இப்பொழுதும்’ என்றது, இத்திருவாய்மொழியிலும் என்றபடி.