பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

280

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    வி-கு : ‘அழுந்தாதே வலம் எய்தி மருவுதல் வலம்’ எனக்கூட்டுக. இனி, ‘அழுந்தாதே உறை கோயில்’ எனக் கூட்டலும் ஆம். அழுந்தாது - அழுந்தாமலிருக்க. ‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க.

    ஈடு : ஏழாம் பாட்டு. ‘திருமலையைச் சென்று கிட்டி எப்பொழுதும் அங்கு வாசம் செய்கையே இவ்வாத்துமாவுக்கு வெற்றி,’ என்கிறார்.

    நலம் என நினைமின் - நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்திபண்ணுங்கோள். இனி, ‘இவ்வுலக விஷயங்களுக்கு எல்லாம் வேறுபட்ட சிறப்பினையுடைய உறுதிப்பொருள் என்று புத்தி பண்ணுங்கோள்’ என்று கூறலுமாம். நரகு அழுந்தாதே - பிரிவால் வரும் துன்பத்தை நுகராமல். ‘ஆயின், ‘நரகு’ என்பது, பிரிவுத் துன்பத்தைக் காட்டுமோ?’ எனின், நரகங்களும் இவர்களுக்கு முடிவு செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பது? ‘காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் - தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் - உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி - நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?

_______________________________________________________

1. ஸ்ரீராமா. அயோத். 30 : 18.

2. ஸ்ரீராமா. அயோத். 27 : 9.

3. ஸ்ரீராமா. அயோத். 53 : 31.