பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

முதல் திருவாய்மொழி - பா. 11

29

இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.

(10)

121

        சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
        ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
        ஓரா யிரம்சொன்ன அவற்றுள் இவைபத்தும்
        சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணனவே.

    பொ - ரை : ‘ஒன்றும் ஒழியாத எல்லாப்பொருள்கட்கும் மூல காரணானான பரஞ்சோதி உருவமாய் இருக்கின்ற இறைவனுக்கு, அமையாது மேலும் மேலும் வளர்கின்ற காதலையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபாராலே அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் நழுவ நில்லாதவர்கள் (கற்று வல்லவர்கள்) வைகுந்தம் அடைதல் உறுதியாம்’ என்றவாறு.

    வி - கு : ‘சேராத’ என்பது, பொருள்களின் குறைவின்மையைக் காட்ட வந்தது; சோர்தல் - நழுவுதல். சோரார் - வினையாலணையும் பெயர். கண்டீர் - தெளிவின்கண் வந்தது. திண்ணன - ஐயமின்மையின் கண் வந்தது.

    ஈடு : 2‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல், கண்டார் எல்லாம் பகவானைப் பெற்றுக் களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்.

    சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கு - இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய், இவரோடே வந்து கலந்து அத்தாலே ஒளி உருவனுமாய் இருந்தான். இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின, இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு

_____________________________________________________________

1. 'அனையவை போற்றி நினைஇயன நாடிக்காண்
  வளமையோ நாளும் செயலாகு மற்றிவன்
  முளைநிரை முறுவலார் ஆயத்துள் எடுத்தாய்ந்த
  இளமையும் தருவதோ இறந்த பின்னே?’

(கலித். 15.)

  என்னும்  பகுதி ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.

2. ‘இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம்,’ என்ற பதங்களைக் கடாஷித்து
  அவதாரிகை. இவை பத்தும் கற்றார்க்கு ஆழ்வாருடைய பா(ஹா) வ விருத்தியுண்டாம்
  என்பது கருத்து.