பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பிற்சேர்க்கை -VI 

 

     ‘கிளரொளியிளமை’ என்ற திருவாய்மொழியின் பொருளைத் தன்னகத்துக் கொண்டிருக்கின்ற பரிபாடலில் உள்ள பாடல் ஒன்றையும் அதன் உரையையும், அழகர் திருமலையின் சிறப்பைக் கூறுகின்ற சிலப்பதிகாரத்தில் உள்ள பகுதியையும் அதன் உரையையும் ஈண்டுத் தருகின்றேன். இங்கு, அவ்விரண்டும் ஒருதலையாகப் படித்து உணர்ந்துகோடற்குரியவை.


பரிபாடல்


பதினைந்தாம் பாடல்

திருமால்


        புலவரை யறியாப் புகழொடு பொலிந்து
        நிலவரை தாங்கிய நிலைமையிற் பெயராத்
        தொலையா நேமிமுத றொல்லிசை யமையும்
        புலவராய் புரைத்த புனைநெடுங் குன்றம்


     5.  பலவெனின் ஆங்கவை பலவே; பலவினும்
        நிலவரை யாற்றி நிறைபய னொருங்குடன்
        நின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே;
        சிலவினுஞ் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
        மலரகன் மார்பின் மைபடி குடிமிய


     10. குலவரை சிலவே; குலவரை சிலவினும்
_________________________________________________

பதினைந்தாம் பாடலுரை :


   
1-5. அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நில வெல்லையைத் தாங்கிய நிலைமை நீங்காத கெடாத சக்கரவாளமுதலாகத் தொல்லிசைப் புலவர் ஆராய்ந்துரைத்த கொண்டாடப்படும் நெடிய குன்றங்களைச் சிறப்பு வகையாற்கூறாது பொது வகையாற் பல வென்றுரைக்கின். ஆங்கு; அசை.


    5-10. அப்பலவற்றுள்ளும் நிலத்துள்ளோரைப் பசி வெம்மை ஆற்றி நிறை பயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்று சில; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற தடங்களுடனே மேகங்கள் படியும் சிகரத்தையுடையவாகிய குலவரைகள் சில சிறந்தன.