பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1

நான்காந்திருவாய்மொழி - முன்னுரை

89

1‘இவள் இடையாட்டத்தில் நீர் செய்ய நினைத்திருப்பது யாது?’ என்று கேட்கிற பாசுரத்திலே தம்முடைய நிலையினை அருளிச் செய்கிறார்.

    ‘ஆயின், மேற்கூறிய இரண்டு திருவாய்மொழிகளிற் போந்த பிரிவுத்துன்பங்களைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் பிரிவுத் துன்பம் மிகுந்து இருப்பதற்குக் காரணம் யாது?’ எனின், 2காசினை இழந்தவனுக்கும் பொன்னினை இழந்தவனுக்கும் இரத்தினத்தை இழந்தவனுக்கும் இழந்ததனால் உளதாய துன்பம் ஒத்ததாக இராது வேறுபடுவது போன்று, அங்கும் இங்கும் பிரிவுத் துன்பம் ஒன்றாயினும், துன்பத்தில் வேற்றுமை உண்டு என்க. ‘எவ்வாறு?’ எனின், அவதாரத்தில் 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போதை’ அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையாலே வந்த ஆற்றாமை ‘அஞ்சிறைய மடநாரை’யில், 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்ற அர்ச்சாவதாரத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ‘வாயுந் திரையுக’ளில்; இங்கு, அவ்விறைவனுக்கும் உயிரான நித்தியசூரிகளை அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ஆகையால், அவற்றைக் காட்டிலும் இதற்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்.

    ‘நன்று; நித்தியசூரிகள் திரளிலே சென்று சேர்ந்து அனுபவிக்கப் பெறாமையால் நோவுபடுகின்றாராயின், பின்னே, அவர்கள் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாமல், 5‘நரசிங்கா’ என்பது போன்ற இறைவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுவது எற்றிற்கு?’ எனின், எங்கேனும் ஒரு காட்டில் இரத்தினங்கள் பறியுண்டால், நாட்டிலே அரசன் வாசலிலே சென்று அவ்வரசன் பெயரினைச் சொல்லிக் கூப்பிடுவது போன்று, நித்தியசூரிகள் திரளிலே தாம் சென்று சேர்வதற்கும் காரணமாக இருப்பவன் இறைவனே ஆகையாலே, அவ்விறைவனுடைய திருப்பெயரினைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

_____________________________________________________________

1. ‘நுமது இட்டம் என்கொல் இவ்வேழைக்கே?’ என வருதலை நோக்கியது.

2. ‘காசு’ என்றது, அவதாரங்களை. ‘பொன்’ என்றது, அர்ச்சாவகாரத்தை. ‘இரத்தினம்’
  என்றது, அடியார்களை. ‘காசினை மணியை’ ‘செம்பொனே திகழும் திருமூர்த்தியை,’
  ‘செழுமாமணிகள் சேரும்’ என வருவன கொண்டு தெளிதல் தகும்.’

3. திருவாய் 1. 3 : 10.

4. திருவாய் 1. 10 : 9.

5. திருவாய் 2. 4 : 1.