ந
நான்காந்திருவாய்மொழி
- புகழும்நல் ஒருவன்’
முன்னுரை
ஈடு :
மேலே ‘ஒழிவில்
காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்;
இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய 1சர்வாத்தும பாவத்தைக்
காட்டிக் கொடுத்தான்; அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
“உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்யவேண்டும்,’ என்று பாரித்த இவர், சொற்களை மாத்திரம் கொண்டு அடிமை செய்வான்
என்?’ எனின், இருவரும் 2இலையகலப்படுக்குமித்தனை போக்கி அவனும் அடிமை கொள்ளமாட்டான்;
இவரும் அடிமை செய்யமாட்டார்; 3‘ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே,
எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றதுகொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்;
4‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற
இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனேயன்றோ அவ்விறைவன்? இவருடைய காதல்தானே
5‘ஆராத காதலே’ அன்றோ? இவருடைய பாரிப்புக்குத் தகுதியாக அவன் சர்வாத்தும பாவத்தைக்
காட்டிக்கொடுத்த இடத்தில் அடிமை செய்கையின்றியே’, அவனுடைய குணங்களை அநுசந்தித்து நிலை குலைந்த
அந்தக்கரணங்களை உடையராய் 6‘காலாழும்
____________________________________________________
1. சர்வாத்துமபாவம்
- எல்லாப் பொருள்களுக்கும் ஆத்துமாவாய் இருக்கும்
தன்மை.
2. ‘இலையகலப்படுக்குமித்தனை’
என்றது, ‘உணவு உண்பதற்கு இடப்பட்ட
இலையை மிகப் பெரிதாக இடவேண்டும் என்று நினைத்தல் இத்தனை’
என்றபடி. அகலப்படுத்தல் - விரிவுபடுத்துதல்; ‘பெரிய இலையாக இருத்தல்
வேண்டும்’ என்றபடி.
3. பாரதம், உத்தியோக
பர். 87 : 13.
4. திருவாய். 4. 3
: 2.
5. திருவாய். 2. 1
: 11.
6. பெரிய திருவந்.
34.
|