பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
139

New Page 1

வேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’ என்றும், ‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர். இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், 1இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச்செய்வர். 

(10)

_____________________________________________________ 

  இதற்குப் பொருள்; இங்கு, ஆவி - உயிர்; உயிர் - பரமாத்துமா. பாவனை -
  பத்தி. ‘புறம்பேயுள்ள வேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும்
  விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்,’ என்றது, இரண்டாவது
  யோஜனை; இது, பிரபத்தி பரமாக அருளிச்செய்தது; இங்கு
  யாதுமோர்பற்றிலாத பாவனையாவது, வேறு உபாயங்கள் ஒன்றிலும் ஒரு
  சிறிதும் பற்று இன்றி இருக்கும் பாவனையாம்; ‘களைவாய் துன்பம் களையா
  தொழிவாய் களைகண் மற்றிலேன்’ என்றிருப்பது. ‘மரண காலத்தில் நம்பிக்கை
  உண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றது, மூன்றாவது யோஜனை; இது,
  அந்திம ஸ்மிருதி பரமாக அருளிச்செய்தது; இங்கு, யாதுமோர் பற்றிலாத
  பாவனையாவது, வேறுபட்ட பொருள்கள் ஒன்றிலும் ஒரு சங்கமில்லாத
  அந்திம ஸ்மிருதியாகும்; ‘உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனால்
  யாதொன்று பாவிக்கப்பட்டது? அஃது அதுவாய்த் தோன்றும்,’ என்பது எல்லா
  ஆகமங்கட்கும் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப்
  பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே
  பாவித்தல் வேண்டும்: அதனான், அதனை முன்னே பயிறலாய இதனின் மிக்க
  உபாயமில்லை என்பது அறிக,’ என்று பரிமேலழகருரை இங்கு ஒப்பு
  நோக்கலாகும்.

(திருக்குறள்,  358.)

1. ‘இத்தையே சொல்லிற்றாக அமையும்’ என்றது, ‘சரீரத்துக்கு உண்டாகும்
  பால்யம், யௌவனம் முதலானவைகள் ஆத்துமாவைச் சாரமாட்டாத
  தன்மையைப் போன்று, உடல் உயிர் என்னும் இவ்விரண்டின் தோஷங்களும்
  இறைவனைச் சாரமாட்டா என்னும் இதனையே சொல்லிற்றாக அமையும்,’
  என்றபடி. ஆக, ‘ஆதுமோர் பற்றிலாத’ என்பதற்கு, ‘அநுசந்தான பரமான
  போது சரீரத்திற்குண்டாகின்ற பால்யம் முதலிய தோஷங்கள் ஒன்றிலும் ஒரு
  சம்பந்தமில்லாத’ என்றும், பத்தி பரமான போது ‘பிரயோஜநாந்தரங்களில்
  பற்றில்லாத’ என்றும், பிரபத்தி பரமானபோது ‘உபாயாந்தரங்களில்
  பற்றில்லாத’ என்றும், அந்திம ஸ்மிருதி பரமான போது ‘வேறுபட்ட
  விஷயங்களில் சங்கமில்லாத’ என்றும் நான்கு வகையாகப் பொருள்
  அருளிச்செய்யப்பட்டமை காணலாம்.