பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
146

New Page 1

வேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும் பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்கவொட்டாமல், வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. 1நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று, ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.

    2வெற்றிலைச்சாறு சிறிது மிடற்றுக்குக் கீழே இழியப்பெற்ற ஒருவன், தன்னைத்தான் அறிகின்றிலன்; அங்ஙனம் இருக்க, 3உள்கலந்தார்க்கு ஓர் அமுதமாய், அமுதிலும் ஆற்ற இனியனாய், 4எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம்,’ என்று தாமே முற்றூட்டாக இவ்வமுதத்தை உண்ட இவர்க்கு மகிழ்ச்சி உண்டாகச் சொல்ல வேண்டாவே அன்றோ? நிற்க.

___________________________________________________ 

1. ‘நடுவே காவற்காடு’ என்றது முதல் ‘முதுகோடே போமாயிற்று’ என்றது முடிய,
  ரசோக்தியாக பட்டர் அருளிச்செய்த இடைப்பிற வரல். இதில் அங்கதன்
  முதலான வானர வீரர்கட்குண்டான மகிழ்ச்சி சொல்லப்படுகிறது.
  ராஜபுத்திரர்கள் - இராம லக்ஷ்மணர்கள். முதலிகள் - முதன்மை
  பெற்றவர்கள்; அங்கதன் முதலியோர். ‘முதுகோடே போமாயிற்று’ என்றது,
  ‘தீமை வரும்’ என்றபடி.

  ‘என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சித் தாழா
   நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்.’

  என்றும்,

  ‘போயினர் களிப்பி னோடும் புங்கவன் சிலையி னின்றும்
   ஏயின பகழி என்ன எழுந்துவிண் படர்ந்து தாவி’

  என்றும் வரும் கவிச்சக்கரவர்த்தியின் வாக்குகள் இங்கு நினைவிற்கு
  வருகின்றன.

2. ‘இப்படி அளவு கடந்த மகிழ்ச்சி கூடுமோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளம்
  பற்றி, ‘கூடும்’ என்பதனைக் கிம்புனர் நியாயத்தாலே சாதிக்கிறார்,
  ‘வெற்றிலைச்சாறு’ என்று தொடங்கி.

3. திருவாய். 1. 6 : 5, 6.

4. திருவாய். 2. 7 : 11.