பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
188

New Page 1

கேட்டு அறியாதவனை. அமரர் பிரானை எம்மானை - சமுசாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகளைக் கொள்ளும் அடிமையைத் தன்பக்கல் ஆசை சிறிதுமின்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டவனை. இதனால், அடியார்களை நழுவவிடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு அன்றிக்கே, தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும். வாய்ந்த - பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும் அச்சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற இவ்வளவேயன்றி, பகவானுடைய குணங்களைக் கேட்டால் விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும், உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய் இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி அவ்விஷயத்திலே மூழ்கிச்சொன்ன. வாய்கை - கிட்டுகை. வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன் நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து - வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து. பகவானுடைய குண அநுசந்தானத்தாலே உரையும் செயலும் வேறுபட்டவராய்க்கொண்டு சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து என்பார், ‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார். அருவினை நீறு செய்யும் - பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்துஉவப்பால்
அன்பால்ஆட் செய்பவரை ஆதரித்தும் - அன்பிலா
மூடரைநிந் தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்திநெஞ்சே செய்.

(25)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.