பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
311

என

என்னும் ஆசையாகிற நன்மையையுடைய ஞானம் முதலான குணங்களோடு கூடினவராய் நன்றான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொல். உறுப்புகளும் அறிவுடைப் பொருள்களைப் போன்று விடாய்த்து, அவைதாம் ஓர் இந்திரியத்தின் தொழிலை ஓர் இந்திரியம் ஆசைப்பட்டு, இவை எல்லாவற்றின் தொழில்களையும் தாம் ஆசைப்பட்டு, இப்படிப் பகவத் விஷயத்திலே விடாய்க்கும்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடைய ஆழ்வார் ஆதலின், ‘நலம் கொள் சீர்’ என்கிறது.

    வலம் கொண்ட ஆயிரத்துள் - சொல்லப்படுகிற பரம் பொருளை வலம் வந்து விளாக்குலை கொண்ட ஆயிரம் என்னுதல்; பரம்பொருளைச் சொல்லுதற்கு 1ஏற்ற ஆற்றலையுடைய ஆயிரம் என்னுதல். இவையும் ஓர் பத்துச் சொன்னால் யாவரும் இலங்குவான ஏறுவர் - ஒப்பு இல்லாததான இப்பத்தைச் சொன்னால், 2இன்னார் இனையார் என்னாதே, பகவானுடைய அனுபவத்துக்குப் பிரிவில்லாத சிறப்பினையுடைய பரமபதத்தை அடையப் பெறுவர். 3’அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, பல சரீரங்களை மேற்கொண்டு அவ்வச்சரீரங்களில் உறுப்புகளும் பூர்ண அனுபவம் பண்ணலாம்படியான தேசத்திலே புகப்பெறுவர்,’ என்றபடி.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        முடியாத ஆசைமிக முற்றுகர ணங்கள்
        அடியார் தமைவிட்டு அவன்பால் - படியாஒன்று
        ஒன்றின் செயல்விரும்ப உள்ளதெல்லாம் தாம்விரும்பத்
        துன்றியதே மாறன்தன் சொல்.

(28)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

____________________________________________________ 

1. நித்தமாகிய வேதம், தேவரும் மூவேழுலகுகளும் உயிர்ப்பன்மையும்
  நின்கட்டோன்றியவாறு அறிந்து கூறும்; சிற்றறிவினேமாகிய யாம் அவற்றுட்
  சிலவற்றை முறை பிறழக் கூறுவதல்லது அவ்வாறு எல்லாம் கூறுவதற்கு
  உரியமல்லம்’ என்பார், ‘வலந்துரைத்தேம்’ என்றார்’ என்பது பரிமேலழகருரை.
  (பரிபா. 3. 1-10)

 
‘கூறுதல்ஒன்று ஆராக் குடக்கூத்த அம்மானைக்
   கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்சொன்ன’

  என்பது, இவருடைய திருவாக்கு.

2. இன்னார் - மேற்கூறிய சொரூபத்தையுடையவர். இளையார் - மேற்கூறிய
  சுபாவத்தையுடையவர்.

3. சாந்தோக்யம், 26.