பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
196

இருத்தலின், ‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது. வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் - அழகியதாய்க் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி. திருநகரிக்கு 1ஸஹ்யம் திருமலையாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.

    காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் ‑ 2சொன்ன பொருளில் அதிசங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது. வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் - ‘இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது. 3திருமலை மாரி மாறாதாகையாலே, திருநகரி வாரி மாறாது; ஆறாக் கயமாகையாலே பிராட்டியுடைய ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.

    ‘இது கற்றார்க்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில், தனக்கு முன்பே தான் காட்டிக்கொடுத்த சமுசாரியை விரும்பும் சீல குணத்தையாயிற்று இதில் சொல்லிற்று; இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று; தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று; ‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் கருணையின் மிகுதியாலே, சர்வேசுவரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி, ‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, 4பலம் கொடுக்கும். இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான

_____________________________________________________

1. ஸஹ்யம் - பிரவாஹத்துக்கு மூலமான மலை.

2. திருக்காரியாரையிட்டு நிரூபித்ததற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சொன்ன
  பொருளில்’ என்று தொடங்கி. ஆப்தி - உண்மையுரைத்தல். அதிசயம் -
  மிகுதி.

3. ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘திருமலை’ என்று தொடங்கி. ஆறாக்கயம்
  - தண்ணீர் வற்றாத குளம்.

4. ‘வினைதீர்க்கும்’ என்பதற்குப் ‘பலம் கொடுக்கும்’ என்று பொருள்
  அருளிச்செய்யக் காரணம், தடைகள் நீங்கினால் விரைவில் பலம்
  சித்திக்குமாதலின், அதனைத் திருவுள்ளம் பற்றி என்க.