பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
254

New Page 1

பெரிது - 1செய்த பாவத்தைப் பார்த்தவாறே, ‘சித்து அசித்தோடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத் தத்துவங்களையும்’ விளாக்குலை கொள்ளும்படி பெருத்திருந்தது. அன்றிக்கே, ‘சமுசாரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கும் ஈசுவரனுடைய குணங்களைக்காட்டிலும், அவன் தந்த மதிநலன்களைக்காட்டிலும் பெரிதாய் ஆயிற்று இருக்கிறது,’ என்னுதல். 2அந்த ஞானமும் செயல் அற்றதாய், அந்தக் குணங்களும் நடையாடாநிற்கச்செய்தேயன்றோ பாவம் தொடர்கிறது?

    3உலகத்தில் பெரியது தத்துவத்திரயம் ஆயிற்று; அவற்றிலும் பெரியதாயிற்று இவருடைய ஞானம்; இதனையும் விளாக்குலை கொள்ளும்படிகாணும் பாவத்தின் பெருமை இருப்பது. செய்வினை - இவைதாம் ஈசுவரனைப் போலே சங்கற்பத்தாலே உண்டாக்கப்பட்டன அல்ல ஆதலின், ‘செய்வினை’ என்கிறது, ‘இவையடையச் செய்து அற்றவையே அன்றோ?’ என்றபடி. ஓ - 4இஃது என்ன ஆச்சரியம்! அன்றிக்கே, துக்கத்தின் மிகுதியைக் குறிக்க வந்ததாதல். ‘திருநாமப் பிரசங்கத்தாலே உணரும்படி

_________________________________________________

1. ‘இதைக்காட்டிலும் பெரிது’ என்னாது, பொதுவாகப் ‘பெரிதால்’ என்கையாலே
  அதனை விரித்து அருளிச்செய்கிறார், ‘செய்த’ என்று தொடங்கி.

2. ‘‘பெரிது என்று அறிந்தபடி யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அந்த ஞானமும்’ என்று தொடங்கி.

3. ‘குணங்களிலும் பெரிது என்றால் போராதோ? மதி நலன்களைக்காட்டிலும்
  பெரிது என்றால் பாவங்களின் மிகுதி தோன்றும்படி யாங்ஙனம்?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உலகத்தில்’ என்று தொடங்கி.
  தத்துவத்திரயம் - சித்து அசித்து ஈசுவரன். திரயம் - மூன்று.

      இவ்விடத்திலே முதலிகள், ‘மேலே ‘சிறியன்’ என்கையாலே, ஞான ஒளி
  அடங்கிற்று என்று ஞான சங்கோசம் சொல்லப்பட்டதன்றோ?
  அங்ஙனமிருக்க, ‘மதிநலன்களைக்காட்டிலும்’ என்று ஞானம் இருப்பதாக
  அருளிச்செய்வது சேருமோ?’ என்று கேட்க, ‘ ‘கேவலம் ஒன்றுமில்லை’
  என்கிறதன்று; அவனைப் பெறுகைக்கு உறுப்பாயிருப்பதொரு சாதன
  அநுஷ்டானம் செய்கைக்கு ஈடான ஞானம் இல்லை, அவன் மயர்வறத் தந்த
  மதிநலமாகிய பத்தி ரூபா பந்ந ஞானம் உண்டு என்று அருளிச்செய்வர்.
  இல்லையாகில், கூப்பிடக்கூடாதேயன்றோ?

4. ஆஸ்ரயத்தின் சிறுமையையும் பாபத்தின் பெருமையையும் பார்த்து ‘இஃது
  என்ன ஆச்சரியம்’ என்றும், ‘துக்கத்தின் மிகுதியைக் குறிக்க வந்ததாதல்’
  என்றும் அருளிச்செய்கிறார். இவை, ஓகாரத்தின் பொருள்.