பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
256

நினைத்தால் கழுவாய் செய்ய இழிவார்களத்தனை; இவர் ‘இதற்குப் பரிஹாரம் அவன் கையிலே’ என்றேயன்றோ அறுதியிட்டிருப்பது? எப்போதும் 1‘கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்’ என்றேயன்றோ இவர் சொல்லுவது? 2இதுதான் சுதரிசனமாய் இருக்குமேயன்றோ? 3‘பகவானுடைய பலத்தினாலே பகவத் கைங்கரிய ரூபமான கர்மங்களைச் செய்கிறேன்,’ என்ற ஜிதந்தா தோத்திரத்தையும் ஈண்டுக் காணல் தகும். ஆகையாலே, ‘ஞாலம் உண்டாய்’ என்று 4அவன் படியை அனுசந்திக்கிறார்.

    ‘ஆயின், அப்படி அவன் படியை நினைந்து அச்சம் அற்றவர்களாய் இருந்த பேர் உளரோ?’ எனின், 5‘யானைகளையும் புலிகளையும் சிங்கங்களையும் கண்டு பிராட்டி பயப்படவில்லை,’ என்று ஸ்ரீ ராமாயணம் கூறுதலை ஈண்டு நினைக்கத் தகும். ‘இனி ‘ஞாலமுண்டாய்’ என்றதனால், 6‘இனிப் பரிஹாரம் இல்லை’ என்னும்படியான ஆபத்துகளிலே வந்து உதவுமவனன்றோ? பூமியாகப் பிரளயங்கொள்ளிலோ பாதுகாக்கையாவது? எல்லார்க்கும் உண்டான ஆபத்து ஒருவனுக்கே உண்டானால், உதவலாகாதோ? தங்கள் தங்களுடைய ஆபத்தை அறிந்து கூப்பிடாதார்க்கோ உதவலாவது? ‘ஆபத்து அறிந்து கூப்பிடுவார்க்கு உதவோம்’ என்னும் நிர்ப்பந்தம் உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

_____________________________________________________

1. ‘அவன் கையிலே பரிஹாரம்’ என்று அறுதியிட்டிருப்பர் என்னுமதற்குப்
  பிரமாணம், ‘கைகழலா’ என்ற திருப்பாசுரம். இது, பெரிய திருவந்தாதி, 87.

2. ‘இதுதான்’ என்று தொடங்கும் வாக்கியம் சிலேடை. இதுதான் - இவ்வாறு
  அறுதியிடுவதுதான். சுதர்சனமாயிருக்கும் - ‘மங்களம் பொருந்திய
  மதமாயிருக்கும்’ என்பதும், ‘ ‘ஈசுவரனே ரக்ஷகன்’ என்கிறது நல்ல
  ஞானமாயிருக்கும்,’ என்பதும் பொருளாம்.

3. ‘அவன் கையிலே பரிஹாரம்’ என்பதற்கு வேறும் ஒரு பிரமாணம்
  காட்டுகிறார், ‘பகவானுடைய’ என்று தொடங்கி.

4. அவன் படியை - அவனுடைய சத்தி யோகத்தை.

5. ஸ்ரீராமா. அயோத். 62 : 20.

6. ‘இப்படிக் கனத்த பாவத்தைப் பண்ணினீராகில் நம்மால் ரக்ஷிக்கப்போமோ?’
  என்ன, மீண்டும் வேறு ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘இனிப் பரிஹாரம்’
  என்று தொடங்கி. ‘ஞாலம்’ என்ற சொல்லிற்கு பாவம் ‘தங்கள் தங்களுடைய’
  என்று தொடங்கும் வாக்கியம்.