பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
289

எட

எட்டாந்திருவாய்மொழி - ‘ஏறாளும்’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே, கேட்டார் அடைய நீராகும்படி  கூப்பிட்டார்; ‘இப்படிக்கூப்பிடச் செய்தேயும், சர்வேசுவரன் நமக்கு முகம் தாராதிருந்தது நம் பக்கல் விருப்பம் இல்லாமையாலேயாக அடுக்கும்,’ என்று பார்த்து, 2‘சம்பந்தமுள்ளவனுமாய், சுசீலனுமாய், விரோதிகளை அழிக்கிற தன்மையனுமாய் இருக்கிறவன் இது வேண்டா என்று இருக்குமாகில், எனக்கோதான் இது வேண்டுவது?’ என்று விடப்பார்த்து, 3‘அவனுக்கு வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு,’ என்று ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அற்றபடியை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார். 4அவன் விரும்பின வழியாலேகாணும் ஆத்தும வஸ்துவை

_____________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்கிறார், ‘மேல் திருவாய்மொழியிலே’ என்றது முதல்
  ‘அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார்’ என்றது முடிய.

2. இத்திருவாய்மொழியிலே வருகின்ற ‘அடியேனைப் பணி கொண்ட’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனாய்’ என்றும், ‘கூறாளும்
  தனியுடம்பன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுசீலனுமாய்’ என்றும்,
  ‘அசுரர்களை நீறாகும்படியாக’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  ‘விரோதிகளை அழிக்கின்ற தன்மையனுமாய்’ என்றும் அருளிச்செய்கிறார்.

3. ‘உயிரினால் குறைஇலம்’, ‘உடம்பினால் குறை இலம்’?
  என்பனவற்றைத்திருவுள்ளம் பற்றி, ‘அவனுக்கு வேண்டாத நானும் என்
  உடைமையும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அந்யாபதேசம் -
  மாற்றிச் சொல்லுதல்; வேறு வகையில் பேசுதல்.

4. ‘அவன் விரும்பிலனாகில், அதற்காகத் தான், தன்னையும் தன்
  பொருள்களையும் விரும்பாதிருத்தல் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அவன் விரும்பின வழியாலே’ என்று தொடங்கி. 

  ‘காதலர் நயந்தது யாமுடை நயப்பே;
  காதலர் வேண்டின யாம்வேண் டினமே;
  காதலர் எம்மை வேண்டார் எனிலே
  யாமும் வேண்டலம் இனியே’

  என்றார் பிறரும்.