பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
332

ஆத

ஆத்துமாவையும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக் காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். செயிர் இல்சொல் இசை மாலை - செயிர் - குற்றம். இல் - இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது, ‘ஆத்துமாவும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற வார்த்தையில் குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.

    வயிரம் சேர் பிறப்பு அறுத்து - இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து. வைகுந்தம் நண்ணுவரே - ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, 1‘அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் நினைவின் வண்ணமும் பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். என்றது, 2 ‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி. 3அவன் விரும்பினபடி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது?

திருவாய்மொழி நூற்றாந்தாதி

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் - தேறுங்கால்
என்றனக்கும் வேண்டா எனுமாறன் தாளைநெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு.
  

(38)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________

1. சாந்தோக்யம், 7 : 26.

2. ‘பலபடிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல
  விதங்களாலும்’ என்பது பொருள்.

3. ‘இவர் திருமேனியை நித்தியமுத்தர்கள் திருமேனிகளைப் போன்று அவன்
  விரும்பாநிற்க, இவர் ‘வேண்டா’ என்பான் என்?’ என்ன, ‘அவன்
  விரும்பினபடி’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், இங்கே,
  ‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத்தகும்.
  ‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின
  திருமேனி’ என்பதும் பொருள்.