பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
382

இன

இனி, ‘அந்தப் பரமசேதநன் ஆகிறான் யார்? அவனுடைய சொரூப சுபாவங்கள் இருக்கும்படி எங்ஙனே? அவனுடைய செயல்கள் இருக்கும்படி எங்ஙனே?’ என்னில், 1அவற்றைப் பிரமாணம் கொண்டு அறியவேண்டும். அவற்றுள், 2பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள் இந்திரியத்தாலே காண முடியாத பொருளைக் காண்பதற்குப் பயன்படாமையாலே அவை பிரமாணம் ஆகமாட்டா; இனி, ‘ஆகமம் முதலானவைகள் பிரமாணம் ஆனாலோ?’ என்னில், புருஷனுடைய புத்தியால் வருகின்ற 3வஞ்சகம் முதலான தோஷங்கள் அவற்றிற்கு உள ஆகையாலே, அவையும் பிரமாணம் ஆகமாட்டா; இனி, 4பதினான்கு வகைப்பட்ட வித்தியைகளுள் முக்கியமானதாய், நித்தியமாய், புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே வஞ்சகம் முதலான தோஷங்கள் இல்லாததாய், 5சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம் பிரமாணம் ஆக வேண்டும்.

_____________________________________________________

1. ‘மக்கள் நினைத்தபடி இன்ப துன்பங்கள் வாராமையாலே ஒரு சேதனன்
  உளன்’ என்று அவன் செய்யும்படியை அனுமானத்தாலே சாதித்தார் மேல்.
  ‘அவனுடைய ஸ்வரூபம் ஸ்வபாவம் முதலானவை இருக்கும்படி எங்ஙனே?’
  என்ன, ‘பிரமாணங்கொண்டு அறிய வேண்டும்’ என்று பிரமாணத்தை
  அறுதியிடுகிறார், ‘அவற்றைப் பிரமாணங்கொண்டு அறியவேணும்’ என்று
  தொடங்கி.

2. பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம், ஆகமம், அர்த்தாபத்தி, அபாவம்,
  சம்பவம், ஐதிஹ்யம் எனப் பிரமாணங்கள் எட்டு வகைப்படும். அவற்றுள்,
  மநுவினாலே அங்கீகரிக்கப்பட்ட பிரமாணங்கள் மூன்று; அவை,
  பிரத்தியக்ஷம், அநுமானம், ஆகமம் என்பனவாம். அவற்றையே, இங்குப்
  ‘பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்கள்’ என்று அருளிச்செய்கிறார்.
  ‘முதலான’ என்றதனால், அநுமானத்தைக் கொள்க. ‘ஆகமம்
  முதலானவைகள்’ என்றது, பாசுபத சாங்கிய யோகங்களைக் குறித்தபடி.

3. ‘வஞ்சகம் முதலான தோஷங்கள்’ என்றது, பிரமம், பிரமாதம், அசக்தி
  இவைகளை.

4. ‘பதினான்கு வகைப்பட்ட வித்தியைகள்’ என்றது, இருக்கு, யசுர், சாமம்,
  அதர்வணம் என்னும் வேதங்களையும்; சிக்ஷை, வியாகரணம், கல்ப சூத்திரம்,
  நிருத்தம், ஜோதிஷம், சந்தோவிசிதி என்னும் ஆறு அங்கங்களையும்;
  நியாயம், மீமாம்சை, புராணம், தர்மசாத்திரம் என்னும் உபாங்கங்கள்
  நான்கனையுமாம்.

5. ‘‘சாத்துவிக புராணங்களாலே விரித்துரைக்கப்படுகின்ற வேதம்’ என்றது,
  என்னை? வேதார்த்தத்தை நிர்ணயம் செய்வதற்கு உபப்பிருஹ்மணங்கள்
  வேண்டுமோ?’ எனின், வேதார்த்தத்தை அறுதியிடுவதற்கு, சர்வ
  சாகைகளிலும் சர்வ வேதாந்த வாக்கியங்களிலும் நிறைந்த அறிவு
  படைத்திருத்தல் வேண்டும்; அத்தகைய ஞானம் படைத்தவர்கள்
  மஹரிஷிகளேயாவர்; ஆதலால், ‘இதிஹாச புராணாப்யாம் வேதம்
  ஸம்உபபிரும்ஹயேத்’,  ‘பிபேதி அல்ப சுருதாத் வேதோமாமயம்
  பிரதரிஷ்யதி’ என்கிறபடியே, மஹருஷிகள் வசனங்களாகிய
  உபப்பிருஹ்மணங்கள் வேண்டும். ‘வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்மிருதி
  இதிகாச புராணங்களாலே’ என்பது, ஸ்வாமி பிள்ளை லோகாசாரியர் ஸ்ரீ
  சூக்தி. (ஸ்ரீவசன பூஷணம்)