பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
384

New Page 1

முக்காலங்களையும் உணர்ந்தவரும் தாமரை மலரில் உதித்தவருமான பிரமாவானவர், ‘உள்ளவாறு சொல்லுகிறேன், என்று சொன்னார்,’ என்கிறபடியே, முனிவர்களைப் பார்த்து உபதேசிக்கிறவிடத்திலே, ‘நான் முக்குணங்களுக்கும் வசப்பட்டவனாய் இருப்பேன்; தமோகுணம் மேலிட்ட போதும் ரஜோகுணம் மேலிட்டபோதும் சொன்னவற்றைப் போகட்டு, சத்துவகுணம் மேலிட்ட சமயத்தில் சொன்னவற்றை எடுத்துக்கொள்ளுங்கோள்,’ என்றானே அன்றோ?

    இனி, 1‘தாமச கல்பங்களிலே அக்நி சிவன் இவர்களுடைய மாஹாத்மியமானது பரக்கச் சொல்லப்படுகிறது; இராஜச கல்பங்களிலே பிரமனுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுவதை அறிகிறார்கள்; சாத்துவிக கல்பங்களிலே விஷ்ணுவினுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுகிறது’ என்னாநின்றதே அன்றோ? ஆகையாலே, 2குணபேதங்களாலே புருஷபேதங்களைக் கொண்டு அவ்வழியாலே புராணபேதம் கொள்ளலாய் இருந்தது. ஆகையாலே, ‘சாத்துவிக புராணங்களாலே அறியப்படுகின்ற வேதம்’ என்று விசேடித்துச் சொல்ல வேண்டியிருந்தது. 3ஆதலால், சாத்துவிக புராணங்களாலே விரிக்கப்படுகின்ற வேதமே பிரமாணமாகக் கொள்ளவேண்டி இருந்தது,’ என்க.

    4அந்த வேதத்துக்கு மூன்று குணங்களால் வருகின்ற குற்றம் இல்லையேயாகிலும், இரு வகைப்பட்ட உலகங்களோடு

_____________________________________________________

1. ‘சத்துவம் முதலான குணங்கள் மேலோங்கி இருக்கும் சமயத்தில்
  சொல்லப்பட்டவை யாவை?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘தாமச கல்பங்களிலே’ என்று தொடங்கி. இது, மாத்ஸ்யபுராணம். ‘தாமச
  கல்பம்’ என்றது, ‘தமோகுணம் மேலோங்கியிருக்கும் தினத்தில்’ என்றபடி.
  கல்பம் - பிரமனுடைய ஒரு நாள். இராஜச கல்பம், சாத்துவிக கல்பம்
  என்பனவற்றையும் இங்ஙனமே கொள்க. ‘என்னாநின்றதேயன்றோ?’ என்றது,
  ‘மாத்ஸ்யபுராணம் இங்ஙனம் கூறுகின்றதேயன்றோ?’ என்றபடி. 

2. ‘குண பேதங்களாலே புருஷ பேதம் கொண்டு’ என்றது, ‘ஒருவனே
  ஒவ்வொரு குணத்தோடு கூடியிருக்கின்ற கால வேற்றுமையால், அந்த அந்தக்
  குணத்தையுடையவனாகக் கருதப்படுகின்ற வேற்றுமையால்’ என்றபடி.

3. இதுகாறும் கூறி வந்த விஷயத்தை முடிக்கிறார், ‘ஆதலால்’ என்று தொடங்கி.

4. ‘‘சாத்துவிக புராணங்களாலே விரிக்கப்படுகின்ற வேதம்’ என்பது என்?
  வேதம் புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே, முக்குணங்களால்
  வருகின்ற தோஷம் இல்லையே அதற்கு?’ எனின், விடை அருளிச்செய்கிறார்,
  ‘அந்த வேதத்துக்கு’ என்று தொடங்கி. ‘மூன்று குணங்களையுமுடைய’ என்று
  தொடங்கும் பொருளையுடைய சுலோகம், ‘ஸ்ரீ கீதை, 2 : 45. ‘இந்த உதரத்
  தெரிப்பு, த்ரைகுண்ய விஷயமானவற்றுக்குப் பிரகாசகம். வத்சலையான மாதா,
  பிள்ளை பேழ்கணியாமல் மண் தின்ன விட்டுப் பிரதி ஒளஷதம் இடுமா
  போலே, எவ்வுயிர்க்கும் தாய் இருக்கும் வண்ணமான இவனும், ருசிக்கு
  ஈடாகப் பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே,’ என்னும்
  ஆசார்ய ஹிருதய வாக்கியங்கள் (13, 14. சூ.) இங்கு அநுசந்தேயங்கள்.