பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
12

கடகட என

கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசத்தை அடைந்த ஆயர்கள் அங்கு வந்தார்கள்”, “தாமரைக் கண்ணனான அந்தக் கண்ணபிரானும் சென்றார்” என்கிறபடியே, இவற்றைத் தப்பிப்போய், முரிந்து விழுகிற ஓசையைக் கேட்டு முன்பு இல்லாததனைக் காணும் காட்சியாலே சிவந்த மலர்ந்த கண்களும் தானுமாய் இருக்கிறபடி. 1“புணர் மருதம் இற நடந்த பொற்குன்றினை” என்னக்கடவதன்றோ. அழகிது என்னில், நாட்டில் உள்ள அழகைப்போன்றது ஆம் என்று நினைத்து, வேறுபாடு தோன்ற ‘பொல்லா மணியே!’ என்கிறார் என்னுதல். அன்றிக்கே, நாட்டார் கண்டு கண்ணெச்சில் படாமைக்குக் கரிபூசுகிறார் என்னுதல். அன்றிக்கே, தொளையாதமணி; அதாவது பிறரால் அநுபவிக்கப்படாத மணி என்னுதல்; பொல்லல் - தொளைத்தல். இதுவும் யசோதைப் பிராட்டி அருகில் நின்று சொன்ன வார்த்தை.

    தேனே - வந்து எடுத்துக்கொண்ட காலத்தில் ஸ்பரிசத்தாலும் மழலைச்சொற்களாலும் கொண்டாடிச் சொல்லும் வார்த்தை. இன் அமுதே -அப்போதையில் இனிமையாலே சொன்ன வார்த்தை. ஆக, தேனே! இன் அமுதே! என்னும் இவை இரண்டானும் 2நிரதிசய போக்யமாய், போன உயிரை மீட்கவற்றாய் இருக்கையைத் தெரிவித்தபடி. “அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்” என்று சொல்லுகிறபடியே நிரவதிக போக்கியமாயிருக்கை. என்று என்றே - ஒருகால் சொல்லி, ‘தப்பச் செய்தோம்’ என்று மீளத்தான் செய்தேனோ என்பார் ‘என்று என்று’ என்கிறார். சில கூத்துச் சொல்ல -பரிவுடைய யசோதைப்பிராட்டி இவற்றிலே ஈடுபட்டுச் சொல்லும் வார்த்தைகளை அன்றோ அப் பரிவு இல்லாத நான் சென்னேன் என்பார் ‘கூத்துச்சொல்ல’ என்கிறார். கூத்தாவது, ஒருவன் நினைவையும் செயலையும் மற்றொருவன் செய்வது.

_______________________________________________

1. பெரிய திருமொழி, 2. 5 : 1.

2. “தேனே” என்றதனை நோக்கி ‘நிரதிசய போக்கியமாய்’ என்கிறார். நிரதிசய
  போக்யம் - தனக்குமேல் ஒன்று இல்லாத இனிமையையுடைய பொருள்.
  “இன்னமுதே” என்றதனை திருவுள்ளம்பற்றிப் ‘போன உயிரை மீட்கவற்றாய்’
  என்கிறார். அதனைப் பிரமாணத்தோடு விவரிக்கிறார் ‘அமுதென்றும்’ என்று
  தொடங்கி. இது இரண்டாந் திருவந். 85.