பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
152

எல

எல்லாம் வைகுந்தமாகும் - அவர்களுக்கு உத்தேசிய பூமி பரமபதமாம். அன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன்தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம்தானே பரமபதமாம் என்னுதல். 1அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ. 2இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது; இப்பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்; இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்; 3இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாசறு சோதிகண்ணன் வந்துகல வாமையால்
        ஆசை மிகுந்துபழிக்கு அஞ்சாமல் - ஏசறவே
        மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
        உண்ணடுங்கத் தான்பிறந்த ஊர்.

(43)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_______________________________________________

1. இவர்கள் இருந்த இடத்தை வைகுந்தமாகச் சொல்லலாமோ? என்ன, ‘அவன்
  சந்நிதி’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. மடல் எடுக்க வேண்டும்படி அரிதிற்பெறக்கூடிய பலம், இப்பாசுர
  மாத்திரத்தாலே பெறலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘இப் பாசுரங்களை’ என்று தொடங்கி. ‘பகவானுடைய குணங்களை’
  என்றது, “ஆசறுசீலனை”, “வாசுதேவன்” என்பன போன்ற பாசுரப்
  பகுதிகளில் சொல்லப்படுகின்ற குணங்களை. ‘இது கூடாதாகில்’ என்றது,
  பகவானுடைய குணாதிக்யத்தாலே பல சித்தி கூடாதாகில் என்றபடி.
  பரிபூர்ண சமாஸ்ரயணமாவது, பரமபக்தியை யுடையவர்களாய் அவனை
  அடைதல். ‘பலம் இல்லையாம்’ என்றது, பலத்தின் கௌரவத்தைப் பார்த்தால்,
  பரிபூர்ண சமாஸ்ரயணமும் அதற்குத் தகுதியாகாது; ஆகையாலே, அதற்குப்
  பலம் இல்லை என்றபடி.

3. அவன்தான் இதனை வியாஜமாகக்கொண்டு மஹா பலத்தைக் கொடுப்பான்
  என்று சொல்லலாமோ? என்ன, ‘இங்ஙன் அன்றாகில்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.