பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
246

ஆற

ஆறாந்திருவாய்மொழி - “கடல்ஞாலம்”

முன்னுரை

    ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக அன்றோ சென்றன; இரண்டுமாய்க் கலந்து சென்றால் பிரீதியாலே தலை எடுக்கவும் ஆம் அன்றோ, அது செய்யாதே, புண்ணியத்தின் குறைவால் பிரீதி இன்மை ஒன்றே தலை எடுத்தது; ஆகையாலே, மேல் உருவெளிப்பாட்டாலே அவனை நினைத்துத் தரித்தது ஒரு நிலையும் போய், அலாபத்தால் வரும் துவட்சியே ஆயிற்று; இப்படித் துவண்ட இவள், பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கப் பார்க்கிறாள் இத்திருவாய் மொழியில்.

    ஒவ்வோர் அர்த்தத்தைப்பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க் கீதோபநிடத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத்தாயார், ‘இது ஏதேனும் மணிமந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயங்கொண்டு, அத்தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள். இனி, 2‘அவனைப் பிரிகையாலே வந்த ஆற்றாமையாலே அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று தெளிய மாட்டுகின்றிலள் தன் கலக்கத்தாலே. இவ்வளவிலே புகுந்து ‘இதுதான் என்?’ என்று வினவப் புகுந்த 3உறவினவர்களைப் பார்த்துத் திருத்தாயார், அவனுடைய வார்த்தைகளைப் பேசுகையால் வந்த ஒற்றுமையாலும், ஞானமுத்திரை பார்வை முதலியவைகள் இருந்தபடியாலும், சர்வேச்வரன் இவள்பக்கல் ஆவேசித்தானாக வேணும் என்று சொல்லுகிறாள், ‘அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறியமாட்டாமையாலே.

___________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்கிறார் ‘மேல் திருவாய்மொழியிலே’ என்றது முதல், ‘இத்
  திருவாய்மொழியில்’ என்றது முடிய. அநுகரித்தல்-அவன் சொல்லும்
  வார்த்தைகளைத் தானும் சொல்லுதல். கீதோபநிடத ஆசாரியன் - ஸ்ரீ
  கிருஷ்ணன்.

2. அநுகரிக்கிறாள் என்று தெளியலாகாதோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அவனைப் பிரிகையாலே’ என்று தொடங்கி.

3. இத்திருவாய்மொழியில் வருகின்ற “உற்றீர்கட்கு” என்றதனை நோக்கி
  'உறவினர்களைப் பார்த்து’ என்கிறார்.