பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
183

New Page 1

முதன்மை இல்லாதவனாகச் செய்து கொண்டு கோத்ததும். 1“குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார். 2பெண்களுடைய மாலையிலே இடையீடாகத் தன்னைக் கோக்கிறபோது, ‘விஜாதீயன் ஒருவன் கலந்தான்’ என்று தோற்றாதபடி அவர்களோடே ஒரு நீராகக் கலந்தபடி. பெண்களும் பெண்களும் அல்லவோ கைகளைக்கோத்து விளையாடுவார். 3திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாததுபோலே காணும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி, கோக்கை - தொடுத்தல். கைகோத்துக் கொண்டு ஆடும் கூத்து அன்றோ, குரவைக் கூத்து ஆகிறது.

    குன்றம் ஒன்று ஏந்தியதும் - 4சுவர்க்கம் என்று கொண்டு ஒரு போக பூமியாய், அங்கே தேவமாதர்களோடே கழகம் இருந்து புண்ணியத்தின் பலத்தை அநுபவம் பண்ணி மிக்க சுகத்தோடு இருப்பான் இந்திரன் ஒருவன் உளன் அன்றோ; அந்த அநுபவத்தைப் பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடேகூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு அது பொறுக்கமாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று ஒரு வியாஜமாகக் கல்மழையைப் பெய்வித்தான்; அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக்கொண்டு நின்றபடி. 5ஒருவன் இங்கே ஒருநாள் மூக்குப் புதைக்குங் காட்டில் ‘நம்முடைய போகம் பகுந்து போகப் புகாநின்றது’ என்று அஞ்சி அவரை உவரை

 

1. “பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமும் இதிலே
  தீர்ந்தது என்கிறார் ‘குரவை பிணைந்த குழகும்’ என்று தொடங்கி.

2. “கோத்ததும்” என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘பெண்களுடைய’
  என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘பெண்களும்’ என்று
  தொடங்கி.

3. “குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்” என்று பதங்களைப்
  பிரயோகித்ததற்குப் பிரயோஜனம் அருளிச்செய்கிறார் ‘திருக்குரவையில்’
  என்று தொடங்கி.

4. மேலே உள்ள பதங்களையும் கூட்டிக்கொண்டு “குன்றம் ஒன்று
  ஏந்தியதும்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘சுவர்க்கம்’ என்று
  தொடங்கி.

5. இந்திரன் அப்படிப் பொறாமை என்னும் குணம் உள்ளவனோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒருவன்’ என்று தொடங்கி. மூக்குப்
  புதைத்தல் - பிராணாயாமம் செய்தல். ‘அவரை உவரை’ என்றது,
  அப்ஸரஸ்திரீகளை.