பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
225

என

என்பாள் ‘தொலை வில்லிமங்கலம் தொழும்’ என்கிறாள். ‘கறுத்திருக்கும், வெளுத்திருக்கும்’ என்னுமாறு போலே, தொழுகையே நிரூபகமாகவுடையவள் என்பாள் ‘தொழு மிவளை’ என்கிறாள். 1“கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிறவனுமானவனைப் பார்த்துச் சொன்னார்” என்னுமாறு போலே; “கணபுரம் கை தொழும் பிள்ளை” என்னுமாறு போலே. 2இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்திபண்ணியன்றோ மீட்பது! இவள்படி கைமேலே காணாநிற்கச்செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே? பழி சொல்லப் பணைக்கிறவள் இவள், பழியை நீக்குவதற்குப் பார்க்கிறீர்கோள் நீங்கள் என்பாள் ‘இவளை நீர்’ என்கிறாள்.

    தொழுகை தேகயாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்கவேண்டும் என்பாள் ‘இனி’ என்கிறாள். பகவத்விஷயத்தில் 3மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ? நியமித்தல் நியமிக்கப்படுதல் என்ற தன்மையேயோ வேண்டுவது; பெற்றவர்கள் என்னா, பொருத்தமில்லாத காரியங்களில் இழியக்கடவதோ? என்பாள் ‘அன்னைமீர்!’ என்கிறாள். தக்க பருவத்தினையுடையவர்களானார் பக்கல் பெற்றவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ? புக்க இடத்தே ஈடுபட்டவர்களாகாநிற்க, பெற்ற சம்பந்தம் கொண்டு மீட்கவோ என்பாள் ‘உமக்கு ஆசை இல்லை’ என்கிறாள். விடுமினோ - இவ்வளவில் நீங்கள் கைவாங்க அமையும்.

 

1. “தொழுமிவளை” என்றதற்குக் கூறிய விசேட உரைக்குப் பிரமாணங்கள்
  இரண்டு காட்டுகிறார் ‘கைகூப்பினவனும்’ என்று தொடங்கியும், ‘கணபுரம்’
  என்று தொடங்கியும்.

  “இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
   ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.

  “கணபுரம்” என்பது, பெரிய திருமொழி, 8. 2 : 9.

2. “தொழிமிவளை ஆசை இல்லை” என்கிறவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘இவளை’ என்று தொடங்கி. இவள்படி-இவள் சரீரமும்,
  இவள் விதமும். கைமேலே-பிரத்யக்ஷமாக என்பது நேர் பொருள். கையிலே
  என்பது வேறும் ஒரு பொருள்.

3. ‘மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ’ என்றது, மூழ்கினவர்களை
  மீட்கப்போகாது என்கிறது ஒன்று இல்லையோ? என்றபடி. ஆயினும்,
  பெற்றவர்களான எங்களுடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டாவோ?
  என்ன, ‘பெற்றவர்கள்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.