பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
529

    பிடித்தார் பிடித்தார் - பிடித்தவர்களைப் பிடித்தவர்கள்; பற்றினாரைப் பற்றினார். வீற்றிருந்து - 1“அந்த முக்தன் சுவதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்” என்கிறபடியே, இருவர்க்கும் ஒக்குமன்றோ வீற்றிக்கை. 2தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் சேஷமாகவுடையனாகையாலே வந்த ஆனந்தத்தையுடையனா யிருப்பான் அவன்; “இவனேயன்றோ ஆனந்திப்பிக்கப்படுகிறான்” என்கிறபடியே, அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தத்தையடைகின்றவனாக இருப்பான் இவன். பெரிய வானுள் நிலாவுவரே - 3“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப்பெறுவர்கள். 4இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, 5மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம்புக வேண்டாத தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். 6இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா; இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை. 7நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப்பத்துங் கற்றார்

 

1. அவன் அன்றோ வீற்றிருப்பான்? இவனை “வீற்றிருந்து” என்னலாமோ?
  என்ன, ‘அந்த முக்தன்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். வீற்றிருத்தல் - வேறுபாடுதோன்ற இருத்தல்.
  “ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25.

2. ஆயின், ஈசுவரனுக்கும் இவனுக்கும் வாசி யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தன்னினின்றும்’ என்று தொடங்கி.

3. “பெரிய வான்” என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘மஹாகம்’
  என்று தொடங்கி.

4. “பெரிய வான்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இந்திரன்
  முதலானோர்’ என்று தொடங்கி.

5. பரமபதத்துக்குப் பெருமை யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘மேல்வரும்’ என்று தொடங்கி. ‘மேல்வரும் அநுபவம்
  ஒழிய’ என்றது, மேலும் மேலும் அநுபவிக்குமது ஒழியச் சரணாகதி
  செய்ய வேண்டா என்றபடி.

6. பிடித்தாரைப் பிடித்தல் மாத்திரம் போதியதாமோ? தனியே இவன்
  சரணாகதி செய்யவேண்டாவோ? என்ன, ‘இவர்செய்த’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

7. ஞான அநுஷ்டானங்கள் வேண்டாவோ நமக்கு? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘நற்கன்றுக்கு’ என்று தொடங்கி.