பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

மூன்றாந்திருவாய்மொழி - முன்னுரை

101

திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்காதனுடைய புன்சிரிப்பு, கடைக்கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தையுடையவளாய், ‘அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட, பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப்போந்து, ‘உனக்கு இத்துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன, ‘நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாகமாட்டாது. நான் 1அவன் பக்கலிலே சென்ற மனத்தையுடையவள் ஆனேன்; ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடுபோய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’ என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.

    அங்ஙன் அன்றிக்கே, ‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே, 2‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே, பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக, 3பிரிந்து கூடாவிடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது. 4இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ? ஆகையாலே, பிரியாவிடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ்வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும் ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலே

____________________________________________________________________

1. ‘அவன் பக்கலிலே சென்ற மனத்தையுடையவளானேன்’ என்றது, இத்திருப்பதிகத்தில்
  வருகின்ற ‘என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
  ‘என்னைக்காட்டுமினே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘நீங்கள்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.

2. ‘ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
  புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ’

என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

3. ‘பூர்ண ரசமான கலவி உண்டானால் பிரிய வேண்டுவான் என்?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘பிரிந்து கூடாவிடில்’ என்று தொடங்கி.

4. ‘ஒரே பொருள் என்னலாம்படி கலந்தால், பின்பு பிரியக் கூடுமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இனி, எல்லாவளவிலும்’ என்று தொடங்கி.