பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஆற

ஆறாந்திருவாய்மொழி-‘பாமரு’

முன்னுரை

    ஈடு : 1இப்படித் தெளிந்தால், பின்னைச் செய்வது கூப்பிடுகை போலேகாணும்; 2இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் ஆவரே. 3‘அம்மங்கி அம்மாள்’ இத்திருவாய்மொழியில் பாடக் கேட்டு அனுபவித்துப்போரும் இதற்கு மேற்பட, இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டச் சொல்லப் போகாது’ என்று பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். 4மேலே, ‘ஆழி எழச்சங்கும்’ என்ற திருவாய்மொழியிலே, சர்வேஸ்வரன் காட்டிக் கொடுத்த வெற்றிச் செயல்களை அனுபவிக்கைக்கு உறுப்பாக, அவனுடைய வீரச்செயல்களை அருளிச்செய்தார்; அருளிச்செய்த முகத்தாலே அவனுடைய அவதாரங்களையும் அதற்கு அடியான கிருபை முதலான குணங்களையும் நினைத்து, ‘இக்குணங்களும் நடையாடாநிற்க, இவற்றிலே சம்பந்தம் உண்டாய் இருக்க, தாங்கள் சேதநராய் இருக்க, சம்சாரிகள் இதனை இழப்பதே!’ என்று ஆச்சரியப்பட்டார் மேல் திருவாய்மொழியில். ‘அவர்கள் விருப்பம் இல்லாமையாலே இழக்கிறார்கள்; விருப்பமுடைய நாம இழப்போம் அல்லோம்; அவனுடைய அவதாரங்களையும் வடிவழகையும் அனுபவிப்போம்,’ என்று பார்த்த

_____________________________________________________________________

1. மேல் திருவாய்மொழியிலேயுள்ள ‘வார்த்தை அறிபவர்’ என்ற திருப்பாசுரத்தோடு
  இத்திருவாய்மொழிக்கு இயைபினை அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றி
  வியாக்யாதா ஈடுபடுகிறார், ‘இப்படி’ என்று தொடங்கி. என்றது, ‘விருப்பம்
  இல்லாததனை நீக்குதல் விருப்பமுள்ளதனைக் கொடுத்தல் ஆகியவற்றைச்
  செய்யுமவன் அவனாகையாலே, ‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டு
  நம்பினால், பின்பு செய்யக்கூடியது இல்லாமையாலே கூப்பிடுகை அன்றோ
  உள்ளது?’ என்றபடி.

2. இப்படிக் கூப்பிடாத போது வரும் குற்றத்தை அருளிச்செய்கிறார், ‘இல்லையாகில்’
  என்று தொடங்கி. இல்லையாகில் - இப்படிக் கூப்பிட்டலராகில்.

3. ஆர்த்தியாலே இத்திருவாய்மொழியில் கூப்பிடுகிறார் என்பதற்கு ஆப்தவசனம்
  காட்டுகிறார், ‘அம்மங்கி அம்மாள்’ என்று தொடங்கி. ஆர்த்திக்கு - துக்கத்துக்கு.

4. இயைபினை அருளிச்செய்கிறார், ‘மேலே’ என்று தொடங்கி.