புரிவேன் என்று அருள, திருத்துழாய் தேவி உடனே அவ்விடம் வந்து துளசிச் செடியாய் மலர்ந்தாள். இந்த துளசியின் மகிமையைப் பற்றி நம்மாழ்வார் திருவிருத்தம் 53வது பாசுரம் பரக்கப் பேசுகிறது. மிருகண்டு மகரிஷியின் புதல்வரான மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாகவும், திருமால்தனக்கு மாப்பிள்ளையாகவும் வரவேண்டும் என்றெண்ணி நீண்ட நாள் பேராவல் கொண்டவராயிருந்தார். அவர் தீர்த்தாடானம் செய்து ஷேத்ரயாத்திரை செய்து வருங்காலத்தில் இவ்விடத்திற்கு வந்ததும், தனது எண்ணம் ஈடேற தவமியற்ற தகுந்த இடம் இதுதான் என்றுணர்ந்து இவ்விடத்து திருமாலைக் குறித்து 1000 ஆண்டுகள் தவமியற்ற, பக்தருக்கருளுமுகத்தான் இலக்குமி தேவி, மழலைக் குழந்தையாக திருத்துழாய்ச் செடி மடியில் தோன்ற தாம் எண்ணியிருக்கும் திருமகளே இவள் என்றுணர்ந்து எடுத்து வளர்த்துவர பருவத்தின் எல்லையில் திருமகள் நிற்கும் ஓர்நாள் (பங்குனி மாதம் ஏகாதசி திருவோண நாளன்று) திருமால் கிழப்பிராமணன் வேடங் கொண்டு வந்து பெண் கேட்டார். நீரோ முதியவர். என் மகளோ சின்னஞ் சிறியவள். இவ்விதங் கேட்பது உமக்கழகல்ல என்றார் மார்க்கண்டேயர். யாம் அனைத்தும் அறிந்தவர். முதுமை உடம்பிலேதானன்றி உள்ளத்திலில்லை. நீரே கதியென்று கிழப்பிராமணன் கூற, என் மகள் சமைக்கக் கூட தெரியாதவள். மறந்து போய் உணவில் லவணம் (உப்பு) சேர்க்கத் தவறினால் கூட நீங்கள் சினந்து சபிக்கக்கூடும். இது ஒத்துவராது என்றார் முனிவர். உம் மகள் சமைக்கும் உப்பிலா பண்டமே எமக்கு உகப்பு. நான் இப்பெண்ணை மணந்து கொள்ளாமல் இவ்விடம் விட்டு நகரமாட்டேன் என்று கூறி பெருமாள் அமர்ந்துவிட்டார். செய்வதறியாது திகைத்த மார்க்கண்டேயர் ஆபத்தில் உதவும் பரந்தாமனை வேண்டி நிஷ்டையிலமர்ந்தார். தமது தபோ வலத்தால் வந்திருப்பவர் திருமாலே என்று நினைத்து கண் திறக்கும் வேளையில் சங்கு சக்கர தாரியாக பெருமாள் காட்சியளிக்க தண்டனிட்டு வணங்கிய மார்க்கண்டேயர் கன்னிகாதானம் செய்வித்து தமது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. உப்பில்லா பண்டத்தை உகந்து நாம் ஏற்போம் என்று பெருமாள் சொன்னதாலேயே இன்றும் உப்பிலா நிவேதனமே பெருமாளுக்கு படையலாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. உப்பு சம்பந்தப்பட்ட பதார்த்தங்களை இக்கோவிலுக்குள் எடுத்துச் செல்பவர்கள் கடும் நரக வேதனை பெறுவர் என்று புராணங்கள் உரைக்கின்றன. இதனாற்றான் இப்பெருமானுக்கு உப்பிலியப்பன் எனவும் திருநாமம் அமைந்ததென்பர். |