பக்கம் எண் :

11

     பெரியோர் உதாரணம் காட்டுவர்.

     இத்தகைய எம்பெருமானிடம் தன்னைச் சரணாகதி பண்ணிக்கொண்ட
வைணவனின் லட்சணம் மட்டும் சாமான்யமானதோ, யார் வைணவன் என்பது
பற்றி பாகவத ரஹஸ்யம் கூறும் விளக்கம் இங்கே தரப்படுகிறது.

     கைங்கர்யமும் (கைங்கர்யம் என்றால் எம்பெருமானுக்குத் தொண்டு
புரிதல் என்பது பொருள்) நாம ஜெபமும் இல்லாமல் யாருக்கு மன நிம்மதி
ஏற்படாதோ, அவனே உண்மையான வைணவன். பணிவிடைக்கும்
ஜெபத்திற்குமாக எவன் ஜீவிக்கிறானோ, அவனே வைணவன். வைணவன்
என்பவன் பிறப்பதில்லை. அவனுடைய சத்குணங்களே அவனை வைணவனாக
உருவாக்குகிறது.

     சமீபத்தில் வாழ்ந்த மகாத்மா காந்தியடிகள் வைணவக் கொள்கைகளால்
ஈர்க்கப்பட்டவர். இவர் முதிர்ந்த விஷ்ணு பக்தர் என்பதும் உலகறிந்த
உண்மை. உயிர் துறக்கும் தனது இறுதிக் கட்டத்திலும் ராம், ராம் என்ற நாம
ஜெபத்தோடு உயிர் நீத்தவர்.

     வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியா என்ற நர்ஸி மேத்தாவின் பாடல்
மகாத்மாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். நாடு முழுவதும் பாடப்பட்ட
இப்பாடலின் பொருள் எத்துணையாழமான வைணவ லட்சணம்
பொருந்தியதெனப் பாருங்கள்.

     1) எவன் பிறருடைய கஷ்டங்களைத் தன்னுடையதனவாகக் கருதுவானோ,
அப்படிக்கஷ்டப்பட்டவர்கட்கு உதவி விட்டு அதற்காக கர்வம் கொள்ளாமல்
இருப்பானோ அவனே உண்மையான வைணவன்.

     2) எவன் உலகில் பிறந்தவர்கள் அனைவரையும் உயர்ந்தவர்கள் என்று
கருதி, பெரியோர்களை வணங்கி, மனோ, வாக்கு, காயங்களால் தூய்மையைப்
கடைப்பிடிப்பானோ, அவன் உண்மையான வைஷ்ணவன்.
அப்படிப்பட்டவனுடைய தாயே பேறு பெற்றவள்.

     3) எவன் தனது நண்பனையும், விரோதியையும் சம நோக்கில்
நோக்குவானோ, எவன் ஆசைகளைத் தியாகம் செய்வானோ, எவன் பிற
மாதர்களை தனது தாயாகக் கருதுவானோ, எவன் ஒரு போதும் பொய்
சொல்ல மாட்டானோ, எவன் பிறர் பொருள் மீது ஆசைவைக்க மாட்டானோ
அவனே வைணவன்.