| 4) எவனை போகமும் மாயையும் அண்டாதோ, எவனுடைய உள்ளத்தில் திடமான வைராக்கியம் குடி கொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தை கேட்டதும் மெய்மறந்து போவானோ அவன்தான் வைணவன். அவனது சரீரமே எல்லாப் புண்ணிய தீர்த்தங்கட்கும் உறைவிடமாகும். 5) எவன் கோபமும், கபடமும், இல்லாதவனோ, எவன் காமத்தையும், குரோதத்தையும் விட்டொழித்தவனோ அப்படிப்பட்ட உத்தமனைத்தரிசிப்பவனது 71 தலைமுறையும் கரையேறி விடும். இப்பேர்ப்பட்ட வைணவன் பற்றிக் கொண்ட வைணவ சம்பிரதாயம் இந்தியா முழுவதும் பரந்து விரிந்த ஒன்றாகும். இன்று உலகத்தில் பல நாடுகளிலும் ஆழ்ந்து வேரூன்றத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த வைணவம் எப்போது உண்டாயிற்றென்று ஒருவராலும் சொல்ல முடியாது. “தொன்று நிகழ்ந்தனைத்து முணர்ந்திடும் சூழ்கலை வானர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதியார் இந்தியாவைப் பற்றிக் கூறுவதைப் போல வைணவமும் என்று தோன்றியதென்று அறுதியிட்டுக் கூறவே முடியாது. உலகம் தோன்றிய போது உண்டான ஓம் என்னும் ஓங்கார சப்தத்துடனும், உயிரினங்கள் தோன்றியதும் அதைப் புரக்கும் தெய்வமான விஷ்ணுவின் அருள் பொழிய ஆரம்பித்தவுடன் வைஷ்ணவத்துவம் வளரத்தொடங்கிவிட்டது. தொன்மை இந்தியாவில் ஒரு காலத்தில் வராஹ அவதார வழிபாடுகள் மட்டும் அதிகமாக இருந்ததென்று உணரமுடிகிறது. அதாவது ஸ்ரீராம, கிருஷ்ண விபவ அவதாரங்களாக எம்பெருமான் மானிட ரூபத்தில் தோன்றுவதற்கு முன்பு உண்டான, மச்ச, கூர்ம, நரசிம்ம, வராஹ அவதாரங்களில் வராஹ அவதார வழிபாடு மட்டுமே இந்தியா முழுவதும் மேன்மையுற்றிருந்ததாகச் சொல்லலாம். திருமலை, திருக்கடன்மல்லை என்னும் மாமல்லபுரம், திருவிடவெந்தை (திருவடந்தை) தஞ்சை மாமணிக்கோவில், திருவில்லிபுத்தூர், ஆகியன வராஹத் தலங்களேயாகும். அதாவது இங்கெல்லாம் தற்போதுள்ள மூர்த்திகளின் வழிபாடும், தற்போதுள்ள அமைப்பிலான ஸ்தலங்கள் கட்டப்படுவதற்கு முன்பு வராஹ மூர்த்திகளும், வராஹ வழிபாடு மட்டுமே இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே தொன்மை இந்தியாவில் வைஷ்ணவத்துவம்தான் பரவி, விரவியிருந்த தென்பதையும் எளிதில் உணரலாம். |