பக்கம் எண் :

13

     இத்தகைய வைணவ சம்பிரதாயம் பற்றியும், விஷ்ணுவைப் பற்றியும்
கூறும் நூல்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே எண்ணற்ற பல மொழிகளில்
அவ்வப்போது தோன்றியிருந்தன. வைணவக் கொள்கைகளையும்,
விஷ்ணுவைப்பற்றியும் அறிய இந்தியா முழுமையும் தோன்றிய நூல்களில்
கீழ்க்கண்ட நூல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதோடு, வைணவ
வரலாறு, வைணவ வளர்ச்சி, போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள அரிய
ஆதாரங்களைத் தருகின்றன.

     கீழ்க்கண்ட நூல்களால் வைணவத்தின் செழுமைபற்றி தெள்ளிதின்
உணரமுடிகிறது.

1. வைணவப் புராணங்கள்

     1) பதினெட்டுப் புராணங்களுள், கருட புராணம், நாரத புராணம்,
விஷ்ணு புராணம், பாகவத புராணம் ஆகியன விஷ்ணு, விஷ்ணுவின்
தோற்றம், பல்வகைப்பட்ட அவதார நிலைகள், போன்றன பற்றி பரக்கத்
தெரிவிக்கின்றன. இதில் பராசர முனிவரால் இயற்றப்பட்ட விஷ்ணு புராணம்
அனைவராலும் போற்றி வணங்கப்பட்டதாகும்.

     2) வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் பாரதமும்.

     3) செவ்வைச் சூடுவார் என்னும் புலவரால் வடமொழியிலிருந்து 5000,
செய்யுட்கள் கொண்டதாக ஆக்கப்பட்ட பாகவத புராணம்.

     4) அதி வீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் விருத்தப்
பாக்களால் இயற்றப்பட்ட நளசரிதம்.

     5) வடமலையப்பர் என்பாரால் தமிழாக்கஞ் செய்யப்பட்ட மச்ச
புராணம், கருட புராணம், வராஹபுராணம்.

     6) பகவத் கீதை.

     7) மகாகவி காளிதாசரின் 2480 செய்யுட்கள் கொண்ட ரகுவம்சம்,
(இதனை அரிகேசரி என்பார் தமிழ்ப்படுத்தியுள்ளார்)

     8) இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மற்றும் இவராக்கிய பிற நூல்கள்.

     9) வேதாந்த தேசிகரின் குரு பரம்பரை ப்ராபவமும் மற்றும் அவரருளிய
பிற நூல்களும்.

     10) மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை.