பக்கம் எண் :

118

     அவ்வாறெனில் நாயகி பாவத்தையேற்று பெண்தன்மையேறிய
திருமங்கையாழ்வாருக்கும் மடலூர்தல் எங்ஙனே பொருந்துமென ஒரு சங்கை
எழலாம். தண்டமிழ் காட்டும் விதிமுறைகளை மீறாத தாண்டக வேந்தனன்றோ
நம் மங்கை மன்னன். எனவேதான், மடலூர்வன் மடலூர்வன் என்றே
குறிக்கிறார். (மடல் ஏறவில்லை என்பதே குறிப்பு) எம்பெருமான்
முகங்காட்டாதேயிருப்பின் நிச்சயம் மடலூர்வன் என்கிறார். ஒண்தமிழ் கூறும்
இலக்கணங்கட்குப் புறம்பாக போக வொட்டேன். ஆயின் நீ முகங்காட்டாதே
இருப்பாயாகில் மடலேறுதல் பெண்டிருக்கும் உண்டு என்று வடநூலார்
கூறியுள்ளார். அதையும் மறந்துவிடமாட்டேன் என்று எச்சரிக்கிறார்.

     மன்னும் வழிமுறையே நிற்கும் நாம் - மானோக்கின்
          அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல்
     மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
          தென்னுரையில் கேட்டறிவதுண்டு
                     - அதனையாம் தெளியோம்

     மன்னும் வட நெறியே வேண்டினோம்............................

     என்று துணிந்து கூறுகிறார். அத்தோடு விட்டாரில்லை. எம்பெருமான்
கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனது குடக்கூத்தில்
அகப்பட்டுக்கொண்ட ஆய்ச்சி ஒருத்தி அவனை அனுபவிக்க முடியாமல்
வருந்தி மடலேறத் துணிந்தாள். அவளைப் போல் எம்பெருமான் பால் காதல்
மயக்குண்ட வடநாட்டுக் கன்னிகையரான வேகவதி, உலாபிகை, போன்ற
பெண்களின் வரலாற்றையும் தமது பெரிய திருமடலில் காட்டி
எம்பெருமானைப் பயமுறுத்துகிறார்.

     தமிழின் பாலும், திருமங்கையின் பாலும், ஆராப்பற்றுக் கொண்ட
ஆராவமுதனுமாகிய எம்பெருமான் இவருக்கு முகம் காட்டிவார்த்தையாடி
இவர் பக்கம் கனிந்து நின்றதால் மடலேறாது விட்டார்.

     (நறையூர் நம்பி இவருக்கு பஞ்ச ஸமஸ்காரம் செய்ததை
முகங்காட்டியதாகவும், வயலாளி மணவாளன் திருமந்திர உபதேசம் செய்ததை
வார்த்தையாடியதாகவும் கொள்ளலாம்)

     இவ்விதம் திருமங்கையாழ்வாரிடம் மடல் பரிசு பெற்றது
இத்தலத்திற்குண்டான தனிச் சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில் இத்தகு சிறப்பு
வேறெந்த தலத்திற்கும் இல்லை.

     14. திவ்ய தேசத்தின் பெயரோடு நம்பி என்று சேர்த்தழைக்கப்படும்
திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இவ்வகையில்