திருக்குறுங்குடி நம்பியும், திருநறையூர் நம்பியும் மிகு புகழ் பெற்றவர்கள். இப்பெருமானை நம்பி என்று மொழிந்தார் திருமங்கையாழ்வார். நம்பி என்றால் பூரணர் என்பது பொருள். நற்குணங்களால் நிறைந்தவர் என்பதும் பொருள். வைணவ சம்பிரதாயத்தில் நம்பி என்னும் சொல் ஆச்சாரியர்களைக் குறிக்கும். இத்திருப்பெயரை முதலில் மதுரகவியாழ்வார் தமது ஆச்சார்யரான நம்மாழ்வாருக்குச் சூட்டினார். “நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால் அன்னிக்கே அமுதூறும் என் நாவுக்கே” என்றார். அவ்விதமே தமக்கு வைணவ லட்சணத்தைப் பொறித்து மந்திர உபதேசம் செய்த இந்த (ஆச்சார்யனை) எம்பெருமானை நம்பி என்றழைத்தார் திருமங்கை. நாளும் விழவினொலியோவா நறையூர் நின்ற நம்பியே நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பியே கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே நன்மான வொண்சுடரே நறையூர் நின்ற நம்பியே என்றெல்லாம் மாந்தி மகிழ்கிறார். | 14. இத்தலத்து எம்பெருமானை திருமணக்கோலத்தில் நாள்தோறும் பிரம்மனால் பூஜிக்கப்படும் தலம் என்று புராணங்கள் கூறுகின்றன. 15. திருமங்கையாழ்வாருக்கு திருக்குடந்தை ஆராவமுதன், திருவரங்கத்து அரங்கன், நறையூர் நம்பி இம்மூவரும் தத்வத்ரஸம் போன்றவர்கள் அதாவது ஜீவாத்மா, பரக்ருதி, உடல் போன்றவர்கள் அதாவது, திருமங்கையாழ்வார் திருக்குடந்தை யானைச் சேவிக்கும்போது, “ஆவியே அமுதே என நினைந்துருகி” - 949 | என்று தனது ஜீவன் திருக்குடந்தையான் என்று தலைக் கட்டுகிறார். திருவரங்கத்தெம் பெருமானிடம்தான் இவர் மோட்சம் வேண்டுமெனக் கேட்கிறார். அதாவது அரங்கனையே பரமபதநாதனாக (பரக்ருதி) கொண்டு மோட்சம் கேட்கிறார். அவர் திருமங்கையை நோக்கி மோட்சம் வேண்டுமாகில் நீ, நமது தெற்கு வீட்டுக்குப் போ என்று கூறுகிறார். |