பக்கம் எண் :

127

16. திருக்கண்ணமங்கை

     பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்
          பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
     விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
          வேள்வி யைவிளக் கினொளி தன்னை
     மண்ணினை மலையை யலை நீரினை
          மாலை மாமதியை மறையோர் தங்கள்
     கண்ணினைக் கண்களாரளவும் நின்று
          கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.
                     (1646) பெரிய திருமொழி 7-10-9

     இனிமையான இசைக்குள் இன்பமும், பாலுக்குள் நெய்யும்
மறைந்திருப்பதைப் போன்று திருமாலின் உருவத்தினையே (அருவமாய்)
கொண்டிலங்கும் வெட்ட வெளியினை, பேரொளியினை, மலையை,
அலைகின்ற கடல் நீரினை தேவர்களுக்கு கண்கள் போன்றவனை, இந்தக்
கண்ணமங்கையுள் நின்றவனை என் கண்களாராக் கண்டு கொண்டேன்.

     என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து கொண்டாடப்பட்ட
இத்திருத்தலம், சோழ நாட்டு நாற்பது திருப்பதிகளில் ஒன்றாக
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சீரும் சிறப்புடனும்
நின்றிலங்குகிறது இங்கிருந்து திருவாரூர் 5 மைல் தூரம் தான்.

வரலாறு

     இத்தலம் பற்றி சூத புராணிகர் தமது சீடர்கட்கு கூறியதாக பாத்ம
புராணம் 5வது காண்டத்தில் 81 முதல் 87 முடிய உள்ள 7 அத்தியாயங்களில்
பேசப்படுகிறது.

     திருமால் பாற்கடலைக் கடைந்த போது சந்திரன், கற்பகத் தரு,
காமதேனு என்று ஒவ்வொன்றாகத் தோன்றி இறுதியில் மகாலெட்சுமி
தோன்றினாள். பாற்கடல் கடைந்த தோற்றத்துடன் இருந்த பெருமானின்
நிலைகண்டு, மிகவும் நாண முற்ற திருமகள், அவரை நேரில் பார்த்துக்
கொண்டிருக்க வெட்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து பாற்கடலிலிருந்து
வெளியேறிய அத்தோற்றத்தையே கண்ணுள் கொண்டு எம்பெருமாளைக்
குறித்து மௌன தவம் இருக்கலானாள்.