| திருமகளின் தவமறிந்த திருமால் அவளை ஏற்றுக் கொள்ள நினைத்து தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் (சேனை முதலியார்) முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்தனுப்ப விஷ்வக்சேனர் அதைக் கொணர்ந்து பிராட்டியிடம் சேர்ப்பிக்க, பிறகு முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ்ந்து காண இவ்விடத்தே எம்பெருமான் திருமகளை மணம் புரிந்து கொண்டார். மகாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய (சிந்துவை) பாற்கடலை விட்டு புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் “பெரும்புறக்கடல் என்பதே பகவானின் திருநாமம். வடமொழியிலும் பிருஹத் பஹிஷ் சிந்து நாத் (பெரும் புறக்கடல்) என்பது திருநாமம். லட்சுமி தவமியற்றியதால் “லட்சுமி வனம்” என்றும் இவ்விடத்தே திருமணம் நடை பெற்றதால் கிருஷ்ணமங்கள ஷேத்ரம் என்றும் ஒரே ஸ்தலத்திற்கு இருக்க வேண்டிய 7 வகை லட்சணங்களும் பொருந்தியிருப்பதால் ஸப்தாம்ருத ஷேத்ர மென்றும் இதற்குப் பெயர். மூலவர் பக்தவத்சலப் பெருமாள். பத்தராவிப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். மிகவும் பிர்ம்மாண்டமான பேரழகு பொருந்திய திருஉருவம். தாயார் கண்ணமங்கை நாயகி உற்சவர் பெரும் புறக் கடல் தாயார் ஸ்ரீ அபிஷேக வல்லி தீர்த்தம் தர்சன புஷ்கரிணி விமானம் உத்பல விமானம். காட்சி கண்டவர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள், வருணன். |