| சிறப்புக்கள் 1. கிருஷ்ணாரண்யம் என்ற பகுதிக்குள்தான் இத்தலமும் அடங்குகிறது. 2. விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களால் அமையப் பெற்றதால் “ஸ்ப்த புண்ய ஷேத்ரம்” ஸப்தாம்ருத ஷேத்ரம்” என்றும் அழைக்கப்படுகிறது. 3. இங்கு நடந்த திருமணத்தைக்கான தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்த தோடு, எப்போதும் இத்திருக் கோலத்தைக் கண்டு கொண்டே இருக்க வேண்டுமெனத் தேனிக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்து கொண்டு தினமும் கண்டு மகிழ்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க வரலாறு. இன்றும் தாயார் சன்னதியில் வடபுறம் உள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் ஒரு தேன்கூடு உள்ளது. எத்தனை நூற்றாண்டுகளாக இது இங்குள்ளது என்று யாராலும் சொல்ல இயலாது. இந்தக் கூட்டினைச் சுற்றி வாழும் தேனீக்கள் யாரையும் ஒன்றும் செய்வதில்லை. 108 திவ்ய தேசங்களில் இங்கு இது ஓர் அற்புதமாகும். 4. மந்திர சித்தி இல்லாவிட்டாலும், ஒரு இரவில் இந்த ஸ்தலத்தில் வாசம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது புராண ஐதீகம். 5. பக்தர்+ஆவி=பத்தராவி என்பது இங்குள்ள மூலவரின் திருநாமம். பக்தர்களின் பொருட்டு ஆவி போல் வேகமாக வந்து அருள் பாலிப்பதால் பத்தராவியென்றும், பக்தர்களை விட்டு ஒரு போதும் நீங்காது பக்தர்களின் அருகிலேயே இருப்பதால் பக்தவத்ஸலர் என்றும் இவ்வெம் பெருமானுக்குத் திருநாமம். பெரும் புறக்கடல் பத்தராவி என்ற இவ்விரண்டு திருநாமங்களையும் திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில், “பெரும்பு றக் கடலையட லேற்றினைப் பெண்ணை யாணை, எண்ணில் முனிவர்க்கருள் அருந்தவத்தை முத்தின்திரள் கோவையை பத்தராவியை” -என்று எடுத்தாண்டுள்ளார். | |