உடனே எம்பெருமான் திருமங்கையின் பாடல்களைக் கற்க ஆவல்கொண்டுவிட்டார். அதற்காக பெரியவாச்சான்பிள்ளை என்கின்ற மேதாவியாக அவதாரம் செய்தார். இந்தப் பெரிய வாச்சான் பிள்ளைக்கு கற்றுக்கொடுக்க திருமங்கையாழ்வாரே நம்பிள்ளையாக அவதாரம் செய்தார். (அதாவது பெரிய வாச்சான் பிள்ளைக்கு ஆசிரியராக இருந்தவர் நம்பிள்ளை) அதாவது ஆவணிமாதம் ரோகினி நட்சத்திரத்தில் அவதரித்தான் கண்ணபிரான். அதே ரோகினி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும் பொருட்டு பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார். பெரிய வாச்சான் பிள்ளைக்கு பாலப் பிராயத்தில் கிருஷ்ணன் என்னும் திருநாமம் இருந்ததை உதாரணமாகக் காட்டலாம். அதேபோல் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரே அதே கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார் இதனை காதலுடன் நஞ்சீ யர் கழல் தொழுவோம் வாழியே கார்த்திகையில் கார்த்திகையுதித்த கலிகன்றி வாழியே என்று நம்பளிள்ளைக்கான வாழித்திருநாமத்தில் நம்பிள்ளையை “கலிகன்றி” என்று திருமங்கையாழ்வாருக்குண்டான திருநாமத்தையிட்டு உணர்த்தியிருப்பதையே உதாரணமாகக் காட்டலாம். என்னே ஆச்சர்யமான விஷயம். ஆழ்வாரின் சொல்லுக்கெல்லாம் எம்பெருமான் கட்டுண்டு நிற்பதைக் காட்டும் உயர்வான வைணவ லட்சணம். நீ விரும்பினால் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னதற்காக திருமங்கையாழ்வாரே, நம் பிள்ளையாக வர, பெருமாளே பெரிய வாச்சான் பிள்ளையாக வந்து பாடங்கேட்டுக் கொண்டார் என்பது பெரியோர் வாக்கு. 22. “கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில் - வண்ண மங்கை கண்கால் வரைகன் திருவரங்கம் கண்ணமங்கை யூரென்று காண் | என்பது பிள்ளைப் பெருமாளையங்காரின் பாடலாகும். |