பக்கம் எண் :

144

     10. திருமங்கையாழ்வார், இப்பெருமானுடனும் இத்தலத்துடனும்
கொண்டிருக்கும் தொடர்பு எண்ணியெண்ணி வியக்கத் தக்கதாகும். போற்றிப்
புகழ்ந்து வழிபாடு செய்வதற்கு ஏற்றதாகும். காயாமகிழ், உறங்காப்புளி,
ஊராக்கிணறு, தோலா வழக்கு திருக்கண்ணங்குடி என்பது அவ்வூரைப் பற்றிய
பழமொழியாகும். இதில் முதலாவதாக உறங்காப்புளியைக் காண்போம்.

11. உறங்காப்புளி

     திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கப்பெருமானின் மதில் கட்டும் பணியில்
ஈடுபட்டிருந்தபோது கட்டிடப் பணிக்கு கையில் காசில்லாது போயிற்று.
அப்போது நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை
ஒன்றுள்ளது. அந்த தங்கத்தைக் கொண்டுவந்தால் மதில் கட்டி விடலாமென்று
இவரது சீடர்கள் தெரிவிக்க உடனே நாகப்பட்டினஞ் சென்று அச்சிலையைப்
பார்த்து உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை, செம்பு போன்றவற்றால்
சிலை செய்தால் ஆகாதோ பொன்னும் வேண்டுமோ என்று அறம் பாடின
மாத்திரத்தில் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட
தங்கம் மட்டும் பிதுங்கிக்கொண்டு வந்து விழுந்ததாம். இதோ அப்பாடலைப்
பாருங்கள்.
 

     ஈயத்தா லாகாதோ இரும்பினா லாகாதோ
          பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ
     பித்தளை நற்செம்புக ளாலா காதோ
          மாயப் பொன்னும் வேண்டுமோ
     மதித்துன்னைப் பண்ணுகைக்கே.

     அதனை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்திற்குச் செல்ல இவ்வூரின் வழியாக
வந்தவர் நடந்த கால்கள் நொந்ததால் சாலையோரத்தில் நாற்று நடுவதற்காக
அடித்துப் பண்படுத்தப்பட்ட (சேறும் சகதியும் நிறைந்த) நிலத்தில்
அத்தங்கத்தைப் புதைத்து வைத்துவிட்டு சாலையோரமிருந்த
புளியமரத்தினடியில் சற்றே படுத்துறங்க எண்ணினார்.

     அப்போது அந்தப் புளிய மரத்தைப் பார்த்து “நான் அயர்ந்து
தூங்கினாலும் நீ தூங்கிவிடக் கூடாது” என்று கூறிவிட்டு அயர்ந்து தூங்கி
விட்டார். மறுநாள் விடிந்தபொழுதில் வயலுக்குச் சொந்தக்காரன் ஏர்கட்டி