| உழ ஆரம்பிக்க, இப்புளிய மரம் தனது இலைகள் முழுவதையும் திருமங்கையாழ்வார் மேல் உதிர்த்து விட்டதாம். சற்றே புல்லரித்த நிலையில் எழுந்த திருமங்கையாழ்வார் அப்புளிய மரத்தைப் பார்த்து உறங்காப்புளியே நீ வாழ்க என்று கூறினாராம். இந்த உறங்காப்புளி இப்போது திருக்கண்ணங் குடியில் இல்லை. அவ்விடத்தில் வயலும் சிறு மேடும்தான் உள்ளது. ஆனால் உறங்காப்புளி இருந்த இடத்தை இன்றும் காணலாம். இவ்வூரில் உள்ள புளியமரங்கள் வித்தியாசமானதாகவும் சற்றே வேறுபட்ட நிலையிலும் தெரிவது கண்கூடு. 12. தோலா வழக்கு உறங்காப்புளியே நீ வாழ்க என்று கூறிய திருமங்கை நிலச்சொந்தக்காரனைப் பார்த்து, ஏய், நீ உழுகக்கூடாது இது எனது நிலம் என்று சொல்ல, அவனோ பரம்பரை பரம்பரையாக இது எனது நிலமாயிற்றே நீ யார் என்று கேட்க, திருமங்கையும் நானும் அதைத்தான் கேட்கிறேன் இது எனது நிலம் நீ யார் என்று திருப்பிக் கேட்டார். வாதம் முற்றி ஊர்ப் பஞ்சாயத்தாரிடம் வழக்காக வந்து நின்றது. நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப்பட்டாவை பஞ்சாயத்தாரிடம் காட்டினான். இப்போது என்ன சொல்கிறீர் என்று பஞ்சாயத்தார் திருமங்கையிடம் கேட்க. எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் இங்கு தங்கியிருந்துவிட்டு நாளை சென்று நானும் உரிமைப் பட்டயம் கொண்டு வருகிறேன் என்றார். ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது. அன்று முதல் இன்றுவரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தேரா வழக்காகவே (தோலா வழக்காகவே, தீராத வழக்காகவே) முடிவில்லாத வழக்காகவே இருந்து கொண்டே வருகிறது. இன்றும் இங்குள்ள பெரியவர்கள் இது எங்களுக்கு வழக்கமாகிவிட்டது. எந்த வழக்கு ஆரம்பித்தாலும் சாமான்யத்தில் முடிவதில்லை என்று ஒத்துக் கொள்கின்றனர். எனவே தேரா வழக்குத் திருக்கண்ணங்குடி என்றும் இவ்வூரைக் கூறுவதுண்டு. |