| நிலையில் உணவுண்டுவிட்டு ஏறிட்டுப் பார்த்தார் திருமங்கை. தனக்கு உண்டி கொடுத்தோனை எங்கும் காணாது பேராச்சர்யப்பட்டு, எல்லாம் அவன் திருவுள்ளம் என்றென்னி தனது பசியைப் போக்கி களைப்பும் நீங்கக் காரணமாக இருந்த மகிழ மரத்தைப் பார்த்து நீ என்றும் காயாமகிழ மரமாக (பசுமை உடையதாகவும், இளமை குன்றாமலும்) இருக்க வாழ்த்தினார். இந்தக் காயா மகிழ்ச் சமீப காலம் வரை இருந்து புயலில் அழிந்துபட்டதாம். இப்போது அந்த இடத்தில் புதியதாக மகிழ மரம் ஒன்றை நட்டு வைத்துள்ளனர். அது வளர்ந்து பார்ப்பதற்குப் பசுமையோடு காயா மகிழமாக இருந்து கொண்டிருக்கிறது. கோவிலுக்குப் பின்புறமே திருமங்கையின் வரலாற்றை நினைவு கூறும் அழியாச் சின்னமாக நின்று கொண்டிருக்கிறது. இத்தல வ்ருட்சமான காயா மகிழின் விதைகளைப் போட்டால் முளைப்பதில்லையாம் இதனாலும் காயா மகிழ் என்ற பெயருண்டாயிற்று என்பர். காயாமகிழின் கீழிருந்து பசி தீர்த்த திருமங்கை இரவோடிரவாக தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கமோடி விட்டார். திருக்கண்ணங்குடியை விட்டுச் செல்லும் போதும், தனது பசி தீர்த்தவன் யார் என்ற ஐயம் திருமங்கையின் நெஞ்சை வருடிக்கொண்டேயிருக்க நடுவழியில் இவரை ஒருவன் மறிக்க, யார் என்று திருமங்கையாழ்வார்கேட்க, நான் “தலையாரி” என்றவன் சொல்ல அருகில் வந்து சற்றே உற்று நோக்கிய திருமங்கைக்கு அவனிடம் சங்கும், சக்கரமும் தெரிந்து மறைய, வழிப்போக்கன் என்று நாம் கூறியதால் வழிப்போக்கனாகவே வந்து கண்ணங்குடி யானே காட்சி கொடுத்தான், உண்டியும் இவனே கொடுத்தான் என்று தெரிந்து, தெளிவிசும்பு சேர்வா ரொப்ப தேஜசுடன் தென்னரங்கம் வந்தடைந்தார் திருமங்கை. |