19. திருநாகையென்னும் நாகப்பட்டினம்
பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா? (1758) பெரிய திருமொழி 9-2-1 |
பொன் போன்ற மேனியும், பொங்கி வழியும் ஒளியுடைய மரகதத்தை
இடையினில் ஆரமாக அணிந்து வாயினால் நல்ல வேதத்தை நவிலும்
தேவரான இவர், என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். என் அல்குலைப்
பார்க்கிறார். என் திரண்ட கொங்கையையும் விடாது பார்க்கிறார். இப்படிப்
பார்க்கின்றாரே இவர், இது எனது தாய்க்குத் தெரிந்தால், அவள் என்னை
எப்படிப் பார்ப்பாளோ, என்ன சொல்வாளோ என்று எனக்குப் பயமாக
இருக்கிறது.
என்று தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு திருநாகையில்
எழுந்தருளியுள்ள சௌந்தர்ராஜ பெருமானிடம் மையல் கொண்டு நிற்கிறார்
திருமங்கை ஆழ்வார்.
இந்தத் திருநாகையென்னும் நாகப்பட்டினம் இன்றைய தமிழ்நாட்டில்
சிறந்து விளங்கும் அழகிய கடற்கரை நகரங்களுள் மிகச்சிறந்த ஒன்றாகும்.
தற்போதைய காயிதே மில்லத் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் இந்தக்
கோவிலின் அருகாமையிலே செல்கிறது (சுமார் ஒரு பர்லாங் தூரம்)
வரலாறு
இத்தலம் பற்றி பிர்ம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10
அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்று சூதபுராணிகர் தமது
சீடர்களுக்கு உரைத்ததாகக் காணப்படுகிறது.