இந்தியா உலகிற்களிக்கும் - ஆம், ஆம் இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க | என்ற பாரதியாரின் பாடலும் இங்கு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இந்தியாவில் தோன்றிய நாம், இந்தியாவில் தோன்றிய மேன்மையான வைணவத்தை, ஆன்மாவிற்கு வழிகாட்டி, முக்திக்கு இட்டுச் சென்று இறைவனோடு இரண்டறக் கலக்க வைக்கும் சித்தாந்தத்தை அறியமுடியாமற்போனால் அதைவிடக் கேவலமானது ஒன்றுமில்லை. ஆம் நாம் முக்தர்கள். மோட்சம் அடைய சக்திபெற்றவர்கள். பரமாத்மாவோடு, இந்த ஜீவாத்மாவை இரண்டறக் கலக்கவைக்கும் பாதை காட்டப்பட்ட பேறு பெற்றவர்கள். பிறப்பறுக்கும் பாக்கியம் பெற்றவர்கள். இதற்கு உபாயமாக திகழ்ந்து வைணவத்தை விளக்கும் சுடர் போன்று மிளிரும் திவ்யதேசங்களைத் தரிசிக்க வேண்டாமா? அங்கே அர்ச்சா மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம்பெருமானின் திருக்கோலங்களைக் கண்குளிரக் காண வேண்டாமா, வம்மின், வம்மின் நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின் திவ்யதேசம் தொழுவோம், வம்மின் |