திவ்யதேச விளக்கம் ஓம் நமோ நாராயணா விஷ்ணு. இவனே இறைவன். இவனே சகல ஜீவராசிகட்கும், தேவர்கட்கும் சகல லோகங்களுக்கும் ஆத்மாவாக இருப்பவன். “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்”. இந்த மகாவிஷ்ணு பரமபதத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் எந்நேரமும் நித்ய சூரிகளால் பல்லாண்டிசைக்க சகல லோகங்களையும் காத்தருள்கிறான். இவர் உலகு படைப்பதற்காகவும், பக்தர்கட்காகவும் தம்மை ஐந்து வடிவங்களில் உண்டாக்கி தரிசனம் தருகிறார் என்பது மரபு. அவைகள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை என ஐவகைப்படும். இதனை விரிவுறக் காணலாம் 1) பரம் பரமபதத்தில் திருமகள், மண்மகள் எனப்படும் பூமாதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவிமார்களுடன் எழுந்தருளியிருக்கிறார். இங்கு பகவானுக்கோ, மற்றவர்கட்கோ, பசி, தாகம், தூக்கம், துக்கம், அயர்வு என்பன கிடையாது. இங்குள்ளவர்களையே நித்ய சூரிகள் என அழைப்பதுண்டு. இவர்கள் அத்தம்பதிகளின் அழகிலும், கல்யாண குணங்களிலும் ஈடுபட்டு எப்போதும் அவர்களைச் சாம கானத்தில் புகழ்ந்து கொண்டு ஆனந்தித்திருப்பார். அத்தம்பதிகளோ இவர்களின் சேர்த்தியில் ஆனந்தம் கொண்டிருப்பர். இவ்வுலகிற்குப் பாட்டுக் கேட்கும் உலகு என்று பெயர். 2) வ்யூகம் ஸ்ரீமந்நாராயணன் பரமபதமாகிய இந்த வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு வெள்ளையந்தீவு என்று சொல்லப்படும் சீராப்தி என்ற பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காகவும் தன்னைக் கீழ்க்கண்ட வ்யூகமாக பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் திருமகளும், பூமகளும் திருவடி வருட யோக நித்திரை செய்து அறிதுயிலமர்ந்த நிலையில் உள்ளார். இதைத்தான் “உறங்குவது போல யோகு செய்து” என்பார் நம்மாழ்வார். இந்த வ்யூகத்தில் (வ்யூகம் என்றால் விரிவுபடுத்துதல் எனப் பொருள்) |