சிறப்புக்கள் 1. இக்கோவிலுக்கு கைங்கர்யம் (திருப்பணி) செய்தவர்களில் முதலிடம் வகித்தவர்கள் நாகர்கள். இவர்கள் சோழர் காலத்தினும் முற்பட்டவர்கள். இவர்களுக்குப் பின்னர் மராட்டிய மன்னர்களும், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும் எண்ணற்ற திருப்பணிகள் செய்துள்ளனர். 2. கடலில் வரும் கப்பல்களுக்கு வழிகாட்ட கலங்கரை விளக்காக இதன் எழுநிலை கோபுரம் (7 நிலைகளான கோபுரம்) கட்டப்பட்டு அதன் மேல் விளக்கு வைத்துக் காட்டப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் இப்போது ஒரு நிலை கோபுரம் உள்ளது. 3. நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இங்குண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் ஸேவை சாதித்ததாகச் சொல்லுவர். 4. கண்டன், சுகண்டன் என்ற இரண்டு அந்தண உடன் பிறப்பாளர்கள் எண்ணற்ற கொடுஞ்செயல்கள் செய்து இறுதியில் ஒரு நாள் இங்குள்ள சார புஷ்கரிணியில் தமது உடலை நனைத்து வைகுந்தம் பெற்றனர். இவ்விருவரின் சிற்பங்களும் (இந்நிகழ்ச்சியின் நினைவாக) இங்குள்ள அரங்கநாதனின் சன்னதியில் கைகூப்பிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 5. தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்புத் தகட்டாலான மாலையொன்று இப்பெருமானின் இடையை அலங்கரிக்கிறது. 6. இங்குள்ள அரங்கனின் சன்னதியில் உள்ள நரசிம்ம அவதாரத்தினை விளக்கும் வெண்கலச் சிலை மிகவும் அபூர்வமானதாகும். ஒரு கையால் பிரஹலாதனை தாங்கி ஆசீர்வாதம் செய்வது போலவும், ஒரு கையை அபய முத்திரையாகவும் வைத்துக்கொண்டு, மற்ற எல்லாக் கைகளாலும் இரண்யனை வதம் செய்வது போலவும் அமைந்துள்ளது. |