பக்கம் எண் :

157

     4. இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி,
கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

     5. இம்மூன்று ஸ்தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு
இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும்,
மணிக்குன்னப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும்,
நரசிங்கப் பெருமாள் ஸ்ரீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள
சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால்
தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.

     6. பரமபதத்தில் ஓடக்கூடிய விரஜாநதியே இங்கு ஓடுவதாகவும்
விண்ணிலிருந்து வந்த தன்மையால் விண்+ஆறு - விண்ணாறு ஆயிற்று
என்றும் சொல்வார்கள்.

     7. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடலைக் கூர்ந்து நோக்கினால்
அரக்கர்களை அடக்கி எம்பெருமான் இந்நகருக்கு (வம்புலாஞ்சோலை, பராசர
நகர்) எழுந்தருளியமை மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளதை அறியலாம்.

     8. பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று
ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமிது.

     9. தஞ்சையைப் பார்த்த வண்ணம் விக்ரஹங்கள் அமைந்திருப்பதால்
தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணி யென்றும்
போற்றப்படுகிறது.