பேசுகின்றன. இவ்விடத்தைச் சுற்றிலும் புரசமாக விளங்கியதால் (பலாச மரக்காடுகள் இருந்தமையை) இவ்விடத்தைக் காடு என்று சுட்டினர். தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்ட இடமும் காடும் சேர்ந்து தலைச்சங்காடு ஆயிற்று. இவ்வூருக்கு அருகில் திருவெண்காடும் இருப்பதால் காடு என்னும் பெயர் ஊருக்கு வருதல் வழக்கமாயிற்று, எனலாம். காடு என்னும் ஈற்றடி வரப்பெற்ற திவ்யதேசம் இதுஒன்றுதான். (காட்டில் வேங்கடம், கண்ணபுரநகர் என்று திருவேங்கிடம் இருந்த இடத்தையும் காடு என்று குறித்ததை ஈண்டு நோக்கத்தக்கது) 4. இவ்வூரில் இருந்த மாடலன் என்னும் மறையோன் ஒருவன் அகத்திய முனிவனின் பொதிய மலையை வலங்கொண்டு குமரியாற்றில் முறைப்படி தீர்த்தமாடி மீண்டும் தன் கிளைஞர் (உறவினர்) வாழும் சொந்த ஊரான தலைச் சங்கானத்திற்கு மீள்கிறார் என்று இவ்வூரைப்பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. “தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து நாண்மறை முற்றிய நலம்புரிக் கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலங்கொண்டு குமரியம் பெருந்துறைக் கொள்கையிற் படிந்து தமர்முதல் பெயர்வோன்” - என்று | சிலப்பதிகாரம் இவ்வூரின் தொன்மை பெயரைச் சுட்டுகிறது. சிலம்பில் கூறப்பட்டுள்ள தலைச் செங்காணமும் தலைச்சங்காடும் ஒன்றுதான். 5. இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு வாய்ந்தது. வெண்சுடர்ப் பெருமாள் (மூலவர் நாண்மதியராகிறார், உற்சவர் வெண்சுடர் பெருமாள் ஆகிறார்) நீளா தேவியுடனும் நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள செப்புச் சிலைகள் மிக்க கலை நுணுக்கம் வாய்ந்தவை. 6. வீரபாண்டியனின் தலைக்கொண்ட பரகேசரி வர்மன், முதலாம் ராசராசன், முதலாம் இராசேந்திரன், ஆகிய சோழ மன்னவர்கள் இத்தலத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்பு |