பக்கம் எண் :

18

தேவர்களாயில்லை. விபவ அவதாரங்கள் நிகழ்ந்த காலக் கட்டத்தில் நாம்
எப்படிப்பட்ட ஜென்மங்களாக இருந்தோம் என்பதை உணருமாறில்லை.
அந்தர்யாமித்யமாய் இருப்பதை அறியும் ஆற்றலும் நமக்கு இல்லை.
எனவேதான் ஒரு மனிதன் (ஒரு பக்தன்) தங்கம், வெள்ளி, கல், மரம்,
சாளக்கிராமம், முதலிய வஸ்துக்களில் யாதாயினுமொரு கருப்பொருளில் தன்
மனதிற்குகந்தவாறும், சாஸ்திரங்களில் கூறியமுறை வழுவாமலும்
மேற்சொன்னவற்றில் ஏதாயினுமோர் உருவத்தை பிரதிட்டை செய்து வழிபடும்
முறைக்கு அருச்சை அல்லது அர்ச்சாவதார வழிபாடு என்று பெயர்.
இதனையே விக்ரக ஆராதனை அல்லது உருவ வழிபாடு என்றும் சொல்வர்.

     மனிதர்கள் செய்யாமல், பக்தர்களின் வேண்டுகோளுக்காக எம்பெருமான்
தானே யுகந்து அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியதுண்டு. பக்தர்கள்
விரும்பிய உருவங்களில் இந்த அர்ச்சா வடிவங்களில் தன்னை
வெளிக்காட்டியதுண்டு.

     நம் போன்று இந்தக் கலியுகத்தில் வாழ்பவர்கட்கு அர்ச்சாவதாரம்
போன்று எளிதாக வேறென்ன இருக்க முடியும். அல்லது இதை விடுத்தால்
தான் நம் மனதில் பக்திக்கு அடைக்கலம் அளித்து உய்விக்க வேறு என்ன
உபாயம் இருக்க முடியும்.

     “புகலொன்றில்லா அடியேன் நின்னடிக்கீழ் புகுந்தொழிந்தேனே”
என்றாற் போல் இதைவிட்டால் நமக்கு புகலேது.

     முக்தியடைந்தவன் பரமபதத்திலிருந்து கொண்டு எப்போதும்
எம்பெருமானின் திவ்யத்தில் மூழ்கியிருக்கிறான். எனவே அவன் பூலோகத்தில்
நித்ய சேவை சாதிக்கும் திருமலை வேங்கடவனையோ, குடந்தைக் கிடந்த
ஆராவமுதனையோ, துவாரகாபுரி கண்ண பிரானையோ சேவிக்க எண்ணினால்
அது முடியாதாம்.

     இதைத்தான் ஆழ்வார் போயினால் பின்னையித் திசைக்கு பிணை
கொடுக்கிணும் போக ஒட்டான் என்கிறார். அதாவது பரமபதத்தில் இருக்கும்
முக்தனை எம்பெருமான் போக வொட்டான்.

     எனவே பூவுலகில் வந்தவனுக்கு அர்ச்சா மூர்த்தியைவிட்டால் வேறு
யார் அடைக்கலம்.

     எனவே அர்ச்சாவதாரமே நம்மை இறைவனிடம் நெருக்கி கொண்டு
சென்று பரமபதத்து நித்ய சூரிகளில் ஒருவனாக ஆக்கும். நம்மையெல்லாம்
உய்விக்கும் பொருட்டே எம்பெருமான் அர்ச்சாவதார மூர்த்திகளாய் இங்கு
எழுந்தருளியுள்ளான். எனவே எளிது எளிது நமக்கு அர்ச்சாவதாரமே எளிது.