| இதைத்தான் நமக்கு ஆழ்வார்கள் காட்டிக் கொடுத்தனர். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வார் இந்த அர்ச்சாவதாரமே நமக்கு எளிது என்று அடையாளங் காட்டிப் போந்தார் என்கிறார் மணவாளமாமுனிகள். செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் - எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் பன்னு தமிழ்மாறன் பயின்று | இவ்வாறு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை, என்னும் எம்பெருமானின் இவ்வைந்து நிலைகளை வேதத்தைத் தமிழில் விரித்துரைத்த நம்மாழ்வார் குறிப்பால் உணர்த்திச் சென்றுள்ளார். விண்மீதிருப்பாய், மலைமேல்நிற்பாய், கடற்சேர்ப்பாய் மண்மீதுழழ்வாய், இவற்றுளெங்கும் மறைந்துறைவாய் என்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி உன்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ? | விண்மீதிருப்பாய் - பரத்துவம் (பரமபதம்) மலைமேல் நிற்பாய் - விபவம் (அவதார புருஷனாக இறங்கி வந்தது) கடல் சேர்ப்பாய் - வ்யூகம் (திருப்பாற்கடலில் 5 வ்யூகமாக பிரித்து) மண்மீதுழழ்வாய் - அர்ச்சை (த்வ்யதேசங்களிலும் பிற ஸ்தலங்களிலுமுள்ள அர்ச்சா மூர்த்திகள்) என் மீதியன்ற புறவண்டத்தாய் - அந்தர்யாமியாய் கலந்தது. இந்தியாவில் உள்ள ஸ்தலங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். 1) ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தலங்கட்கு ஆர்ஷம் என்று பெயர். 2) புராணங்களில் விரித்துரைக்கப்பட்ட ஸ்தலங்கட்கு ‘பௌராணிகம்’ என்று பெயர். 3) தானே தோன்றியவைகள் ‘ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்’ என்றும் அல்லது சைத்தம் என்றும் மொழிவர். |